ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் இன்று என்கவுன்டர் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த 27 ஆம் தேதி, நாட்டையே உலுக்கும் வகையில் 26 வயதான பிரியங்கா ரெட்டி என்ற இளம் பெண் மருத்துவர், கடத்தப்பட்டு வாயில் மது ஊற்றப்பட்ட நிலையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. 

Hyderabad lady doctor murder culprits encounter

இந்த வழக்கில், அந்த மகா பாதக செயலை செய்த முகமது பாஷா என்ற ஆரீஃப், கேசவலு, சிவா, நவீன் ஆகிய 4 பேரையும், சிசிடிவி காட்சியின் உதவியுடன் ஒரே நாளில் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

இதனையடுத்து, இந்த 4 பேரும் 29 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 7 நாள்கள் நீதிமன்றக் காவல் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Hyderabad lady doctor murder culprits encounter

இதனையடுத்து, அவர்கள் மீண்டும் போலீசார் வாகனத்தில் ஏற்றுவதற்கு அழைத்துச் செல்லும்போது, அங்குக் கூடியிருந்த அனைவரும், இந்த 4 பேரையும் தூக்கில் போடும்படி முழக்கங்களை எழுப்பினர்.

இதனையடுத்து, கடந்த 4 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட அந்த 4 பேரிடமும் நீதிபதி நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர், அந்த 4 பேரின் நீதிமன்றக் காவலை ரத்து செய்துவிட்டு, விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைத்தார்.

இதனைத்தொடர்ந்து, போலீசார் தங்களது பாணியில் நேற்று ஒருநாள் முழுவதும் மாறி மாறி விசாரணை நடத்தினர். இதனையடுத்து, நள்ளிரவு 12 மணி அளவில் ஆட்கள் நடமாட்டம் இருக்காது என்பதால், கொலை செய்ததை நடித்துக் காட்டும்படி, அந்த 4 பேரையும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கே போலீசார் அழைத்துச் சென்றனர்.

நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் வந்த போலீசார், முதலில் டோல்கேட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு என்ன நடந்தது என்பதை நடித்துக்காட்டச் சொல்லி உள்ளனர். அதன்படி, அந்த 4 குற்றவாளிகளும் நடித்துக் காட்டி உள்ளனர்.

பின்னர், பஞ்சர் ஒட்டிய கடை, பெட்ரோல் வாங்கிய இடம், மது வாங்கிய கடை ஆகிய அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Hyderabad lady doctor murder culprits encounter

இறுதியாக அதிகாலை 4 மணிக்கு மேல் பிரியங்கா ரெட்டி எரித்துக் கொலை செய்யப்பட்ட சட்டான்பள்ளி பாலத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, திடீரென்று முதல் குற்றவாளியான ஆரிஃப், ஒரு போலீசாரின் கையிலிருந்த துப்பாக்கியை மல்லுக்கட்டிப் பறித்துள்ளார். இதனையடுத்து, துப்பாக்கி முனையில் போலீசாரை அவன் மிரட்டியதாகத் தெரிகிறது.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மற்ற 3 குற்றவாளிகளும், ஆளுக்கு ஒரு திசையில் தப்பி ஓட முயன்றனர். அவர்கள் பின்னால் போலீசார் ஓடியதால், ஆரிஃப் மற்றொரு திசையில் தப்பி ஓட முயன்றுள்ளான். அந்த பகுதி காட்டுப் பகுதி போல் இருந்ததால், தப்பி ஓடினால் மீண்டும் கைது செய்வது சிரமம் என்று கருதிய போலீசார், தப்பி ஓட முயன்ற 4 பேரையும் சம்பவ இடத்திலேயே என்கவுன்டர் செய்துள்ளனர். இதில், 4 குற்றவாளிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த என்கவுன்டர் சம்பவம் நடந்தபோது சுமார் 6 மணி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, குற்றவாளிகள் 4 பேரும் என்கவுன்டர் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே தெலங்கானா முழுவதும் செய்தி பரவியது. இதனையடுத்து, பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Hyderabad lady doctor murder culprits encounter

சிறிது நேரத்தில் நன்றாக விடிந்த பிறகு, அந்த பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தனர். அந்த நேரத்தில் அந்த வழியாகச் சென்ற பள்ளி பேருந்திலிருந்த ஏராளமான மாணவிகள், போலீசாருக்கு நன்றி சொல்லும் விதமாக கைகளைக் காட்டி சத்தம் போட்டு, ஆராவாரம் செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.