கடந்த வாரம் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே பாஜக சார்பில் மக்களுக்கு நலதிட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன், கே.டி.ராகவன், மாவட்ட செயலாளர் பலராமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், முக்கிய பொறுப்பாளர்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

தமிழக பாஜக தலைவர் முருகன் தலைமையில் இந்தக் கூட்டம் நடந்தது. இதில் கட்சி நிர்வாகிகளுடன், கூட்டத்தில் 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் சுற்றி திரிவதாகவும், அவர்கள் கைகளில் பட்டா கத்திகள் வைத்திருந்ததாகவும் போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. இதனை அறிந்த ஓட்டேரி போலீசார் ரகசியமாக கண்காணித்து 6 பேரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களை பரிசோதித்தபோது அவர்களிடம் கத்தி இருந்தது தெரிய வந்தது.

இவர்கள் எதற்காக கத்தியுடன் வந்தார்கள் என்று தெரியவில்லை.. ஒரு மாநில தலைவர் கூட்டத்திலேயே இப்படி ஒரு நிகழ்வா என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நபர்களைப் போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றபோது போலீஸாருடன் சில பாஜகவினர் வாக்குவாதமும் செய்துள்ளனர். இது போலீஸாரை அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்நிலையில் தற்போது மதுரையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வத்துக்கு பரிசாக துப்பாக்கி (ஏர் கன்) கொடுக்கப்பட்ட சம்பவம், சர்ச்சையாகி உள்ளது.

வட இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி நிகழ்ச்சியில் திரிசூலம், துப்பாக்கி போன்றவை தலைவர்களுக்கு பரிசாக கொடுப்பர். அதை கையில் ஏந்தியபடி தலைவர்களும் போஸ் கொடுப்பது வழக்கம். ஆனால் தற்போது துப்பாக்கியோடு போஸ் கொடுக்கின்றனர் தமிழக பாஜக-வினர்.

மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி, நிர்வாகிகள் கூட்டம் திருப்பாலையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் அக்கட்சியை சேர்ந்த பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் கலந்து கொண்டார். அவருக்கு மண்டல தலைவரான தேவகிரி சால்கா என்பவர் துப்பாக்கியை பரிசாக வழங்கினார் என சொல்லப்படுகிறது.

தேவகிரி சால்கா மதுரை அய்யர் பங்களாவில் அரசு உரிமத்தோடு ஏர்கன் தயாரிப்பவர் என்றும், அதன் காரணமாக சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வத்திற்கு அந்த ஏர்கன்னை நினைவு பரிசாக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக கட்சி நிகழ்ச்சிகளில் தலைவர்களுக்கு வீரவாள் பரிசாக வழங்கப்படும் நிலையில், பாஜகவினர் சற்று வித்தியாசமாக ஏர்கன்னை பரிசாக கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் பரிசாக வழங்கப்பட்ட துப்பாக்கி பாதரச குண்டுகள் வைத்து சுடக்கூடிய துப்பாக்கி எனவும், உண்மையான துப்பாக்கி இல்லை எனவும் நிகழ்ச்சியை நடத்திய பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.