உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பீதி காரணமாக ஓடும் பேருந்தில் இருந்து இளம் பெண் தூக்கி வீசப்பட்டு, உயிரிழந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை 
ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்துத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் அன்ஷிகா யாதவ், தனது தாயாருடன், டெல்லியில் இருந்து ஷிகோகாபாத்திற்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருந்தார். அந்த பேருந்தில் பல பயணிகள் இருந்துள்ளனர்.

அப்போது, அந்த இளம் பெண் அன்ஷிகா யாதவிடம் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பின் அறிகுறிகள் சில அந்த பெண்ணிடம் காணப்பட்டதாக சக பயணிகள் சந்தேகம் அடைந்தனர். இது பற்றி, சக பயணிகள் அந்த இளம் பெண்ணிடமும், அந்த இளம் பெண்ணின் தாயாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்குள், இந்த இளம் பெண் குறித்த தகவல் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு சக பயணிகள் கூறி அவரை, பேருந்தை விட்டு வெளியே விரட்டும் படி வற்புறுத்தி உள்ளனர். 

இதனையடுத்து, அந்த இளம் பெண்ணின் மீது ஒரு போர்வை போர்த்தி விட்டு, அந்த பெண்ணுடன் சிலர் மல்லுக்கட்டி உள்ளனர். அப்போது, அந்த இளம் பெண்ணின் தாயார், சக பயணிகளிடமும், அந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடமும் கெஞ்சி உள்ளார். அத்துடன், “என் பெண்ணுக்கு ஒரு நோயும் இல்லை” என்று உறக்கச் சொல்லி விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால், அந்த தாயாரின் எந்த வார்த்தைகளும் அங்கிருந்தவர்களின் காதுகளில் விழவே இல்லை.

பின்னர், யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநரும், நடத்துநரும் சேர்ந்து, கொஞ்சமும் இறக்கம் இல்லாமல் அந்த பெண்ணை தூக்கி, பேருந்தை விட்டு வெளியே வீசி உள்ளனர். இதில், அந்த பெண்ணிற்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

அந்த இளம் பெண் பேருந்தை விட்டு வெளியே தூக்கி வீசப்பட்டு 30 நிமிடங்கள் வரை, அந்த பெண் அந்த சாலையிலேயே கிடந்துள்ளார். வெளியே தூக்கி வீசப்பட்டதில், அந்த இளம் பெண்ணுக்குப் பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியதாகக் கூறப்படுகிறது. அவரை மீட்கவோ, அவருக்கு உதவி செய்யவோ யாரும் முன் வரவில்லை. அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளிடம், அந்த இளம் பெண்ணின் தாயார் கெஞ்சி உள்ளார். ஆனால், யாரும் உதவி செய்ய முன்வரவல்ல.

இதனையடுத்து, அடுத்த 30 நிமிடத்தில் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம் பெண், பரிதாபமாக சாலையிலேயே உயிரிழந்தார். இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த இளம் பெண்ணின் தாயார், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், அங்கு இது இயற்கையான மரணம் என்று கூறி, புகாரை போலீசார் பெற மறுத்துள்ளனர். 

அதேபோல், உயிரிழந்த இளம் பெண்ணின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், மாரடைப்பு காரணமாக அந்த பெண் உயிரிழந்தார் என்று தெரிய வந்துள்ளது. இந்த கொடூர சம்பவம், வெளியே தெரிய வந்த நிலையில், அந்த மாநிலம் முழுவதும் தீயாகப் பரவியது. இதனையடுத்து, டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால், இது குறித்து உத்தரப் பிரதேச மாநில போலீசாருக்கு புகார் தெரிவித்தார். அத்துடன், ஏற்கனவே அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யாதது பற்றியும், அவர் விளக்கம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. 

மேலும், இந்த கொடூரச் செயலை செய்த குற்றவாளிகள் அனைவரும் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது தொடங்கி உள்ளது.

இளம் பெண் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டது தொடர்பாகப் பேசிய அந்த பெண்ணின் சகோதரர் விபின் யாதவ், “என் சகோதரி மீது ஒரு போர்வை போர்த்தி, அவரை தீண்ட தகதவர் போலப் பாவித்து, அதன் பிறகு போர்வையைப் போர்த்திய படியே, பேருந்து இருக்கையில் இருந்து இழுத்துச் சென்று, வெளியே தூக்கி வீசி உள்ளனர்” என்று குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும், “அன்றைய தினம் வெயில் அதிகமாக இருந்ததால், எனது சகோதரி மிகுந்த களைப்புடன் இருந்துள்ளார் என்றும், அந்த சம்பவத்தின் போது என் தயார் அவர்களிடம் கெஞ்சி உள்ளார்” என்றும் கண்ணீர் மல்க குற்றம்சாட்டி உள்ளார். 

“என் தாயார் எவ்வளவோ கெஞ்சியும், பேருந்தின் ஓட்டுநரும், நடத்துநரும் இதைக் கொஞ்சம் கூட கண்டுகொள்ள வில்லை என்றும், இதனால் உதவிக்கு யாரும் வரவில்லை” என்றும் அவர் கவலைத் தெரிவித்தார். 

குறிப்பாக, “என் சகோதரிக்கு எந்த வித உடல் நலப் பாதிப்போ, நோய்களோ இல்லை என்றும், கொஞ்ச காலத்திற்கு முன்பாக சிறுநீரகத்தில் கல் இருந்தது. பின்னர் அது சரியாகி விட்டது என்றும், தற்போது அவர் முழு உடல் ஆரோக்கியத்துடன் தான் இருந்தார்” என்றும், கூறி உள்ளார்.

“அப்படி ஆரோக்கியமாக இருக்கும் ஒரு பெண், எப்படி உயிரிழந்திருக்க முடியும் என்றும்” அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இதனால், இந்த சம்பவம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த கொடூரச் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.