8 வருட காதலில் 2 முறை கருக்கலைப்பு செய்து, கழற்றிவிட நினைத்த காதலனை போலீசார் மடக்கிப் பிடித்து திருமணம் செய்து வைத்த சம்பவம் வைரலாகி வருகிறது.

சென்னை கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளம் பெண் தேவி, அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே, விகாஸ் என்ற அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞனை காதலித்து வந்துள்ளார்.

இருவரும், ஒருவரை ஒருவர் விரும்பி காதலித்து வந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஊர் சுற்றி உள்ளனர்.

இதனையடுத்து, தேவி படிப்பை முடித்து விட்டு, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். காதலன் விகாஸ் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். ஆனாலும், அவர்களின் காதல் கடந்த 8 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்துள்ளது.

8 ஆண்டு காதல் என்பதால், அவர்களது காதல், அளவுக்கு மீறி நெருக்கமானது. காதலன் விகாஸுடன், தேவி நெருங்கிப் பழகிய வந்த நிலையில், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்கள் காதலை, அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். இதன் காரணமாக, தேவி இரு முறை கர்ப்பமாகி உள்ளார். 

இதனையடுத்து, விகாஸ் அளித்த திருமண வாக்குறுதியை நம்பி இரு முறையும், தேவி தன் வயிற்றில் வளர்ந்த கருவைக் கலைத்துள்ளார். 

இப்படியாக, அவர்களது 8 ஆண்டுக் கால காதல் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்துள்ளது. ஒரு கட்டத்தில் விகாஸுக்கும் அவரது மாமா பெண்ணுக்கும், அவரது பெற்றோர் திருமணம் செய்ய தீர்மானித்தனர். இதனால், தேவியுடன் பேசுவதைத் விகாஸ், தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார்.
 
இது குறித்து தேவி விளக்கம் கேட்கவே, “எங்கள் வீட்டில் வரதட்சணையாக 2 லட்சம் ரூபாய் கேட்கிறார்கள் என்றும், பணம் கொடுத்தால் தான் எங்கள் வீட்டில் திருமணம் செய்து வைப்பார்கள்” என்றும் கூறி, தேவியுடன் பழகுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.

“உயிருக்கு உயிராகப் பழகி விட்டு, பணத்திற்காகக் காதலன் தன் உன்னத காதலைத் தூக்கி எறிந்து விட்டானே” என்ற விரக்தியில், கடும் மன உளைச்சலுக்கு ஆளான தேவி, தூக்க மாத்திரை உட்கொண்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையடுத்து, அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தேவியிடம் இது குறித்து விசாரித்துள்ளனர். அப்போது, தேவியின் காதல் விவகாரம் தெரிய வந்தது.

இது தொடர்பாக, விகாஸை அழைத்துக் காவல் ஆய்வாளர் ஆபிரகாம் குரூஸ் விசாரித்துள்ளார். விசாரணையில், “தேவி மீது தற்போது வரை காதலாக இருப்பதும், தன் பெற்றோரின் நிர்ப்பந்தத்தின் பேரிலேயே, அந்த பெண்ணிடம் 2 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் விகாஸ் கூறியதும்” தெரிய வந்தது. 

அத்துடன், “எனது குடும்பத்தைச் சமாதானம் செய்து, இன்னொரு நாளில் தேவியைத் திருமணம் செய்து கொள்கிறேன்” என்றும், காதலன் கூறி உள்ளான்.
இதனால், போலீசாரிடம் விகாஸ் அவகாசம் வாங்கி செல்லவும் முயன்றுள்ளான். 

அப்போது, “காதலில் உறுதியாக இருப்பது உண்மையானால், இப்போதே திருமணம் செய்து கொள்ளலாமே, அதற்கு ஏன் அவகாசம் வேண்டும்” என்று, விகாஸை மடக்கி உள்ளார் காவல் ஆய்வாளர் ஆபிரகாம் குரூஸ். இதனால், வேறு வழியில்லாமல் அவன் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்துள்ளான். 

இதனையடுத்து, தனது செலவில் பூ மாலை மற்றும் மஞ்சள் தாலியை வாங்கிவரச் செய்த காவல் ஆய்வாளர், காவல் நிலையத்தில் வைத்தே, அந்த ஜோடிக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார்.

அதன்படி, விகாஸ், காதலி தேவிக்கு மாலை மாற்றி.. மஞ்சள் தாலி கட்டினார். இதன் காரணமாக, 8 வருடக் காதல் வாழ்க்கை தற்போது திருமணப் பந்தத்தில் அடியெடுத்துவைத்துள்ளது. புதுமண தம்பதிக்குக் காவல் ஆய்வாளர் ஆபிரகாம் குரூஸ் மற்றும் காவல் நிலையத்தில் உள்ள சக காவலர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.