சென்னையில் பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்த யூடியூப் சேனலில் பணியாற்றிய 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில், பேட்டி கொடுத்த பெண்ணையும் விசாரிக்க காவல் துறையினர் முடிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். 

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பெண்களிடம் ஆபாசமாகப் பேசி வீடியோ எடுத்து, அதனை தங்களது யூடியூப் சேனலில் சிலர் ஒளிபரப்பி வந்தனர். 

அதாவது, சென்னையின் பிரபல தனியார் யூடியூப் சேனல்களுல் ஒன்றான “சென்னை டாக்ஸ்” யூடியூப் சேனலில் பெண்களிடத்தில் ஆபாசமாகப் பேசி வீடியோ எடுத்து வெளியிட்டு வந்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் என்று செய்திகள் வெளியானது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் 23 வயதான ஆசன் பாட்ஷா, 24 வயதான கேமராமேன் அஜய் பாபு, யூடியூப் சேனல் உரிமையாளரான 31 வயதான தினேஷ் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

அதன் தொடர்ச்சியாக, போரூரில் செயல்பட்டு வரும் சம்மந்தப்பட்ட யூடியூப் சேனல் நிறுவனத்தில், போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். 

அப்போது, அந்த அலுவலகத்தில் இளம் பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் வேலை செய்தது தெரிய வந்தது. இந்த சோதனையின்போது, அங்கு இருந்தவர்களிடமும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். 

அதே நேரத்தில், அந்த அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான ஆபாச வீடியோக்கள் அடங்கிய கணினி, லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் அந்த சேனல் நிறுவனத்தை போலீசார் மூடி சீல் வைத்தனர். இது போன்று இது வரை சுமார் 200 வீடியோக்கள் சென்னை அந்த சேனலில் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோக்களை எல்லாம் இது வரை சுமார் 7 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. 

அத்துடன், சம்மந்தப்பட்ட யூடியூப் சேனல் இதுவரை முடக்கப்படவில்லை என்றும், ஆனால் அதனை முடக்குவதற்கான நடவடிக்கையில் போலீசார் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

“இத்தகைய அநாகரிகமான செயல்களில் யாரேனும் ஈடுபடுவதாகத் தெரிய வந்தால், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், காவல் துறையினர் எச்சரித்து உள்ளனர்.

“பொது இடங்களில் இது போன்ற செயல்களில் யாரேனும் ஈடுபடுவதை பொது மக்கள் பார்த்தால், தன்னுடைய தனிப்பட்ட தொலைபேசி எண் (8754401111) என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்” என்றும், அடையாறு துணை ஆணையாளர் தெரிவித்துள்ளார். 

இந்த வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளிக்காமலேயே சம்மந்தப்பட்ட பெண், “தான் புகார் அளித்ததாகப் பொய்யான தகவலைப் பரப்பி வருவதாக” காவல் துறையினர் கூறியுள்ளனர். 

மேலும், “இந்த விவகாரம் தொடர்பாக எந்தப் புகாரையும் அப்பெண் கொடுக்கவில்லை” என்றும், சாஸ்திரி நகர் காவல் துறையினர் மறுப்பு தெரிவித்து உள்ளனர். இதனால், சம்மந்தப்பட்ட அந்த பெண்ணுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, அந்த பெண்ணிடம் சாஸ்திரி நகர் காவல் துறையினர் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். இதனால், இந்த வழக்கு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.