கொரோனா பரவல் காரணமாக மருத்துவ நுழைவுத் தேர்வு நீட், மற்றும் ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஜே.இ.இ. மெயின் நுழைவுத்தேர்வு ஆகியவற்றை, தற்போது அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 13 ஆம் தேதியில் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் முதல்வர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமையும் தள்ளி வைக்க முடியாது என்று அறிவித்துவிட்டது. இந்நிலையில் கொரோனா உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாரதிய ஜனதா அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் 7 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் நேற்று (ஆகஸ்டு 26) நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் ஏற்கனவே நீட் தேர்வை தள்ளிவைக்க பிரதமருக்கு கடிதம் எழுதிய மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பாகல், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், புதிய தேசிய கல்வி கொள்கையை குறை கூறியதோடு மாணவர்கள் பிரச்சினையிலும், நுழைவுத் தேர்வுகள் விவகாரத்திலும் மத்திய அரசு அலட்சியமாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டினார்.

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் நுழைவுத்தேர்வுகளை நடத்துவது மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைந்து விடும் என்று கூறிய அவர், தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பாதுகாப்பான நேரத்தில் தேர்வுகளை நடத்துவதுதான் நல்லது என்றும் அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து பேசினார் மம்தா பானர்ஜி. அவர் பேசி முடித்ததும் மம்தாவைப் பார்த்து சோனியா, “நீங்கள் ஏன் கூட்டத்தை நடத்தக்கூடாது, மம்தா ஜி," என்று கேட்டார். அதற்கு மேற்கு வங்காள முதல்வர் புன்னகைத்து, "நீங்கள் மூத்த தலைவர். நீங்கள்தான் நடத்த வேண்டும்" என்று கூறினார். இன்னொருமுறை மீண்டும் சோனியா வேண்டுகோள் வைக்க, “நீங்கள் எனக்கு மரியாதை தருகிறீர்கள். ஆனபோதும் நீங்கள் இருக்கும் இடத்தில் நான் பொறுப்பேற்பது சரியாக இருக்காது” என்று மீண்டும் புன்னகைத்தார் மம்தா பானர்ஜி.

இக்கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, “நான் ஒரு போராளித் தந்தையின் மகன். மத்தியில் பாஜகவைத் தேர்ந்தெடுத்த மக்கள்தான் மாநிலங்களில் ஆள நம்மையும் தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஆனால் நாம் ஏதாவது செய்தால் அது பாவம், அவர்கள் ஏதாவது செய்தால் அது நல்லொழுக்கமா? ஜூன் மாதத்திலேயே நீட் -ஜேஇஇ தேர்வுகளை நடத்த முடியாவிட்டால், இப்போது அவற்றை எப்படி நடத்த முடியும்? கொரோனா தாக்கமும் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. ஒரு மனிதன் மட்டுமே முழு நாட்டையும் நடத்துகிற நிலை உருவாகிடக் கூடாது. நாம் போராட விரும்புகிறோமா... அல்லது பயப்படுகிறோமா?” என்று மற்ற முதல்வர்களிடம் கேட்க, சோனியா காந்தி மற்றும் மம்தா பானர்ஜி இருவரும், “நாம் ஒன்றாக போராட வேண்டும்” என்று பதிலளித்தனர்.

நீட் மற்றும் ஜே.இ.இ ஆகியவற்றை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்று அனைவரும் முடிவெடுத்தனர்.