“பாஜகவைத் தோற்கடிக்க நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும்  ஒன்றிணைவது மிகவும் அவசியம்” என்று, சோனியா காந்தியைச் சந்தித்த பிறகு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தேசிய கட்சியான பாஜக, இந்தியாவில் மாபெரும் கட்சியாக உருமாறி மத்தியில் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்து வருகிறது. 

இந்த நிலையில், டெல்லிக்கு 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலரை சந்தித்துப் பேசி வருகிறார்.

இந்த 3 நாள் சுற்றுப் பயணத்தில், முதல் நிகழ்வாக நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். 

டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை, பிரதமர் மோடி வரவேற்றுப் பேசினார். 

இந்த சந்திப்பின் போது, “மேற்கு வங்கத்திற்குத் தேவையான கூடுதல் தடுப்பூசிகள், மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து” பிரதமர் மோடியிடம் மம்தா பானர்ஜி கோரியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை மம்தா பானர்ஜி  சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது ராகுல் காந்தியும் உடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, சோனியா காந்தியிடம் மம்தா பானர்ஜி நீண்ட நேரம் சந்தித்துப் பேசியதாகத் தெரிகிறது.

இந்த சந்திப்பு முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “சோனியா காந்தி என்னை தேநீர் விருந்துக்கு அழைத்தார் என்றும், அப்போது ராகுல் காந்தியும் உடன் இருந்தார் என்றும், நாங்கள் பொதுவாக அரசியல் நிலைமை பற்றியும், பெகாசஸ் மற்றும் நாட்டில் நிலவும் கொரோனா சூழல் குறித்தும் விரிவாகப் பேசினோம்” என்றும், குறிப்பிட்டார். 

அத்துடன், “எதிர்க் கட்சிகளின் ஒற்றுமை குறித்தும் நாங்கள் விவாதித்தோம் என்றும், இது ஒரு நல்ல சந்திப்பு” என்றும், அவர் கூறினார்.

“எதிர்காலத்தில் நேர்மறையான முடிவு வெளிவர வேண்டும் என்று நான்  எதிர்பார்க்கிறேன் என்றும், அது நிச்சயம் நிறைவேறும் என்று நான் நினைக்கிறேன்” என்றும், அவர் தெரிவித்தார்.

மேலும், “எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைப்பை சோனியா காந்தி விரும்புகிறார் என்றும், மாநிலக் கட்சிகளைக் காங்கிரஸ் நம்புகிறது என்றும், மாநிலக் கட்சிகளும்  காங்கிரசை நம்புகிறது” என்றும், அவர் காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமாவது குறித்தும் பேசினார்.

அதே போல், “பாஜக வலிமையான கட்சியாக உள்ளது என்றும், எதிர்க்கட்சிகள்  வலிமையாக அமைந்தால் வரலாறு படைக்கலாம்” என்றும், அவர் உறுதிப்படத் 
தெரிவித்தார். 

“வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இது புது நம்பிக்கையாக அமையும்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

“கறுப்புப் பணம் உங்களை எதிர்க்கும் நபர்களிடம் மட்டுமே உள்ளது என்றும், அரசியலில் விஷயங்கள் மாறுகின்றன என்றும், நாட்டில் அரசியல் புயல் வரும் போது, நிலைமையைக் கையாள கடினமாகி விடுகிறது” என்றும், மம்தா பானர்ஜி  தெரிவித்தார்.

குறிப்பாக, “எனது செல்போன் ஏற்கனவே ஒட்டுக்கேட்கப்பட்டது என்றும், பெகாசஸ் மூலம் அனைவரின் உயிரையும் ஆபத்தில் ஆழ்த்தி உள்ளது” என்றும், அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

முக்கியமாக, “பெகாசஸ் உள் விவாகரத்திற்கு அரசு ஏன் பதிலளிக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பிய மம்தா பானர்ஜி, “மக்கள் இது பற்றி தெரிந்து கொள்ள  விரும்புகிறார்கள் என்றும், நாடாளுமன்றத்தில் கொள்கை முடிவுகள் எடுக்கப்படாவிட்டால், அங்கு விவாதங்கள் நடத்தப்படா விட்டால், அது எங்கே நடக்கும்?” என்றும், அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், “இது தொடர்பான விவாதங்கள் தேநீர் கடைகளில் நடத்தப்படுவதில்லை, இது நாடாளுமன்றத்தில் தான் நடைபெறும்” என்றும், மம்தா காட்டமாகப் பேசினார். 

மிக முக்கியமாக, “நான் சோனியா காந்தி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருடன் சந்தித்துப் பேசுகிறேன் என்றும், நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்குப் பிறகு, எதிர்க்கட்சிகள் கண்டிப்பாகச் சந்திக்க வேண்டும்” என்றும், மம்தா தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

அதே போல், “பாஜக வைத் தோற்கடிக்க அனைத்து எதிர் கட்சிகளும் ஒன்றிணைவது மிகவும் அவசியம் என்றும், தனியாக நான் ஒன்றுமில்லை என்றும், நான் ஒரு தலைவர் அல்ல என்றும், மாறாக நான் ஒரு கேடர் மட்டுமே” என்றும், மம்தா இந்திய அரசியல் பற்றி விரிவாகப் பேசினார்.