இந்திய அரசியல் நிர்ணய சபையால் இந்திக்கு 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி அலுவல் மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. அதனை நினைவுகூறும் வகையில் ஆண்டு தோறும் ஹிந்தி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இன்றும் (செப்டம்பர் 14) கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி பிரதமர் உள்பட பல்வேறு வடமாநில தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஹிந்தி தினத்தை முன்னிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக இன்று காலை  தூர்தர்ஷனின் தேசிய சேனலில்  அமித்ஷாவின் உரை காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது.

‘ஹிந்தி திவாஸ்’ தினத்தையொட்டி உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஹிந்தி என்பது இந்திய கலாச்சாரத்தின் உடைக்க முடியாத பகுதியாகும். சுதந்திர போராட்ட காலத்தில் இருந்து தேசிய ஒற்றுமை மற்றும் அடையாளத்தின் சக்திவாய்ந்த ஊடகமாக ஹிந்தி திகழ்ந்து வருகிறது” என்று புகழாரம் சூட்டினார்.

ஒரு நாடு என்பது புவியியல் அமைப்பு மற்றும் எல்லைகளால் அடையாளம் காணப்படுவதாகத் தெரிவித்த அமித் ஷா, “ஆனால், மிகப்பெரிய அடையாளம் என்பது மொழிதான். கலாச்சார மற்றும் மொழியியல் பன்முகத்தன்மை நிறைந்த இந்தியாவில், ஹிந்தி பல நூற்றாண்டுகளாக ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒன்றிணைக்கும் சக்தியாக இருந்து வருகிறது. இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளின் சமமான வளர்ச்சியை மனதில் கொண்டே புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வேறு எந்த மொழிகளுடனும் ஹிந்தி போட்டியிடவில்லை. நாட்டு மக்கள் தங்களது தாய்மொழியுடன் ஹிந்தியை பாதுகாப்பதிலும் ஊக்குவிப்பதிலும் அதிக பங்களிப்பு செய்வோம் என உறுதிமொழி ஏற்க அழைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்ட அமித் ஷா, கடந்த இரண்டு மாதங்களில் மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் இரவு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எய்ம்ஸில் அவருக்கு கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் ஹிந்தி தினத்தை முன்னிட்டு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் அமித் ஷா.

ஏற்கனவே கடந்த ஆண்டு ஹிந்தி தினத்துக்கு, “ஒரு மொழியால் நாட்டை ஒன்றிணைக்க முடியும் என்றால், அது பரவலாக பேசப்படும் ஹிந்தி மொழியால் தான் முடியும்” என்று அமித் ஷா தெரிவித்த கருத்துக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்த நிலையில், மீண்டும் அதே கருத்தை பதிவு செய்துள்ளார்.

கடந்த வாரம் தான் தமிழகத்தில் ``ஹிந்திதெரியாதுபோடா” என்ற ஹேஸ்டேக்கை தமிழர்கள் தேசிய அளவில் நெட்டிசன்கள் டிரெண்டிங் ஆக்கியிருந்தனர். இதற்கு பாரதிய ஜனதா கட்சியினர் கடுமையாக எதிர்வினையாற்றியும் வந்தனர். இன்றும், கர்நாடகாவில் இதே ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது. பாஜக தலைமையிலான மத்திய அரசையும், மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், கர்நாடக வரைபடத்துடன் கூடிய கருப்பு நிற டிசர்ட்டில், ஹிந்தி திணிப்புக்கு எதிரான வாசகம் அடங்கிய டிசர்ட்டை அணிந்து இருக்கிறார். 

அத்துடன், இந்த புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ், “என்னால் எந்த மொழியிலும் பணியாற்ற முடியும். எனது கற்றுக் கொள்ளும் திறன் என்பது என்னுடைய விருப்பத்துக்குரியது மட்டுமே. எனது பெருமை எனது தாய்மொழி தான். எங்களிடம் ஹிந்தியைத் திணிக்காதே” என்றும், அவர்  குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜை தொடர்ந்து, கன்னட நடிகர்கள் சிவராஜ் குமார், தனஞ்செய் ஆகியோரும் ஹிந்தி திணிப்புக்கு எதிரான வாசகம் அடங்கிய டீசர்ட் அணிந்து, “ஹிந்திதெரியாதுபோடா” வுக்கு ஆதரவாக தங்களது பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். 

நடிகர் சிவராஜ்குமார் தனது டி ஷர்ட்டில் “கன்னடம் பேசும் இந்தியன் நான்” என்றும், தனஞ்செய் “கன்னட நாட்டில் கன்னடமே தேசிய மொழி” என்றும், தாங்கள் அணிந்துள்ள டீ சர்ட்டுடன் தங்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால், “ஹிந்திதெரியாதுபோடா” பிரச்சாரமும், ஹிந்தி எதிர்ப்பு குரலும், தமிழ் திரைத்துறையைத் தொடர்ந்து கர்நாடக திரைத்துறையிலும் தற்போது எழுந்துள்ளது. இதனால், தமிழகத்தில் பாஜகவினர் எதிர்வினை ஆற்றியது போல், கர்நாடக மாநிலத்தில் உள்ள பாஜகவினர் எதிர்வினை ஆற்றுவார்களா என்றும் இணையவாசிகள் தங்களது கருத்துக்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். இதற்கிடையில், அமித் ஷாவின், ``ஹிந்தி தான் இந்தியாவை இணைக்கிறது" என்ற கருத்து, மீண்டும் சர்ச்சையாகக்கூடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.