கடந்த 2003-ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் பரத். தொடர்ந்து வெற்றி படங்கள் தந்து ரசிகர்கள் மத்தியில் சின்னத்தளபதியாக உயர்ந்து நிற்கிறார். சென்ற வருட இறுதியில் வெளியான காளிதாஸ் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருந்தது. 

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு அறிவித்த லாக்டவுனில் ரசிகர்களுடன் தனது திரைப்பயணம் பற்றி பகிர்ந்து வந்தார். படப்பிடிப்பில் ஏதும் கலந்து கொள்ளாமல் பாடல் பாடி, உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பகிர்ந்து வந்தார் பரத். தற்போது அமேசான் ப்ரைம் வழங்கும் டைம் என்ன பாஸ் வெப்சீரிஸில் நடித்துள்ளார். பிரியா பவானி ஷங்கர், கருணாகரன், ரோபோ ஷங்கர், ஸ்டாண்ட்-அப் காமெடியன் அலெக்ஸ், சஞ்சனா ஆகியோர் இதில் நடித்துள்ளனர். 

டைம் ட்ராவல் செய்யும் ரூம்மேட்ஸிடம் சிக்கிக்கொள்ளும் ஒரு ஐடி ஊழியரின் கதை தான் இந்த டைம் என்ன பாஸ் வெப் சீரிஸின் கதைக்கரு. நாளை இந்த வெப்சீரிஸின் ட்ரைலர் வெளியாகிறது. செப்டம்பர் 18-ம் தேதி முதல் இந்த வெப்சீரிஸ் அமேசான் ப்ரைமில் வெளியாகும் என்ற அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியானது. இதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் திரை விரும்பிகள். 

பரத் நடிப்பில் நடுவன் திரைப்படம் உருவாகியுள்ளது. நடுவன் படத்தின் ஸ்னீக் பீக் ட்ரைலர் வெளியானது. ஷராங்க் இந்த படத்தை இயக்கியுள்ளார். தரன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அபர்ணா வினோத் மற்றும் கோகுல் இந்த படத்தில் நடித்துள்ளனர். சசிகுமார் இந்த படத்திற்கு ஆர்ட் டைரக்டராக பணிபுரிகிறார். யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். மலைப் பகுதியில் நடக்கும் திரில்லர் திரைப்படமாகும். 

இந்த படத்தை தொடர்ந்து பிரபு தேவா இயக்கத்தில் ராதே படத்தில் நடித்து வருகிறார் பரத். சல்மான் கான், மேகா ஆகாஷ் இந்த படத்தில் உள்ளனர். கொரோனா காரணமாக இதன் படப்பிடிப்பு பாதியில் நின்றது குறிப்பிடத்தக்கது. 

நடிகை பிரியா பவானி ஷங்கருக்கும் இதுதான் முதல் வெப்சீரிஸ் என்பது கூடுதல் தகவல். கடைசியாக மாஃபியா திரைப்படத்தில் நடித்தவர், ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகர் கருணாகரன் கைவசம் ட்ரிப், மாநாடு, அயலான் போன்ற படங்கள் உள்ளது.