சீனாவின் வுகான் நகரில் கடந்த ஜனவரி மாதம் முதன்முதலாக கொரோனா வைரஸ் பரவியதாகக் கூறப்பட்டது. அப்போது சீனாவுக்கு அடுத்து மிக அதிகமான பாதிப்பைச் சந்தித்த நாடாக தென்கொரியா இருந்தது. ஆனால், சீனாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலிருந்த வடகொரியாவில் எந்த பாதிப்பும் இல்லை என அந்நாடு அரசு திட்டவட்டமாகக் கூறி வந்தது, ‘சீனாவில் வைரஸ் உறுதியான பிறகு தங்கள் நாட்டு எல்லையை மூடிவிட்டோம். அதனால் வைரஸ் பரவல் இல்லை’ எனத் தகுந்த காரணமும் தெரிவிக்கப்பட்டது.

அப்படி ஜனவரியில் மூடப்பட்ட வடகொரிய எல்லைகள் இன்னும் திறக்கப்படவில்லை அதனால் அங்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுட்டு வந்தது. இதற்கிடையில் இருதினங்களுக்கு முன்னர், மாஸ்க் அணியாமல் இருக்கும் மக்களுக்கு, 3 மாதங்களுக்கு கடுமையான பணி தரப்படும் என்று அவசர சட்டம் இயற்றப்பட்டது. கொரோனாவே இல்லாத நாடான வடகொரியாவில், எதற்காக மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படணும் எனக்கூறி, பலரும் இதற்கு எதிராக கேள்வி எழுப்பி வந்தனர்.

ஆனால் அப்போதும் தங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனோ வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று கூறி வாதிட்டது அந்நாட்டு அரசு. இதற்கிடையில், தற்போது வடகொரியாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதுபற்றி அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ செய்தி நிறுவனம், ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

``தென்கொரியா சென்ற நபரொருவர், ஜூலை 19ம் தேதி  சட்டவிரோதமாக வடகொரியாவிற்கு நுழைந்துள்ளார். அவருக்கு அங்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  

அதைத் தொடர்ந்து அதிபர் கிம் ஜாங் உன் உயர் அதிகாரிகளுடன் அவரச ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, நாடு தழுவிய அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்போதைக்கு அந்த நோயாளி இருந்த கேஸாங் நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி கண்டுபிடிக்கப்பட்ட நபர் கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார். இது ஒரு ஆபத்தான சூழ்நிலை. இது பேரழிவிற்கு வழிவகுக்கும்" என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடகொரியாவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் கொரோனா பாசிட்டிவ் கேஸ் இது என்றாலும்கூட, முதல் நோயாளிக்கே இவ்வளவு கட்டுப்பாடா என்று கேட்கப்பட்டு வருகிறது. ஒருவேளை அங்கு மேலும் சிலருக்கு கொரோனா இருந்து, அரசு அதை மறைக்கிறதா என்றும் சந்தேகிக்கப்பட்டு வருகின்றது.

வடகொரியாவை பொறுத்தவரைக்கும், சிறப்பான மற்றும் தேர்ந்த மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத நாடு அது. அக்காரணத்தினாலேயே, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி மாதமே வடகொரியா தன் எல்லைகளை மூடியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் அங்கு கொரோனாவை எதிர்கொள்ளும் அளவுக்கு போதுமான மருத்துவ வசதிகள் இல்லை எனவும் கூறப்பட்டு வருகிறது.

வடகொரியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள அதேநேரத்தில் தென் கொரியாவில் நாள் ஒன்றுக்கு 30-40 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. 

வடகொரியாவுக்கு மிக நெருக்கமாக இருக்கும் தென்கொரியா, கொரோனா பரவத் தொடங்கிய நாள்களில் மிகமோசமாக பாதிக்கப்பட்டது. ஆனால், இப்போது அங்கு நிலைமையே வேறு. தன்னுடைய அசாத்திய முயற்சியால், இன்று இரட்டை இலக்கத்தில் புது நோயாளிகளைக் கண்டு வருகின்றது தென் கொரியா. ஆகவே மிகச்சிறந்த மருத்துவ வசதி கொண்ட - கொரோனாவை சரியாக கையாளும் நாடாக இது பார்க்கப்பட்டு வருகிறது. அப்படியிருக்கும்போது, அங்கிருந்த ஒரு நோயாளி, எப்படி தப்பித்திருக்க முடியும் என்ற கேள்வி பெரும்பாலானோருக்கு எழும்பியுள்ளது. மட்டுமன்றி, உலகின் மிகவும் கடுமையான பாதுகாப்புகளைக் கொண்ட வட மற்றும் தென்கொரிய எல்லையை அனுமதியில்லாமல் யாராலும் கடக்க முடியாது என்பதால், `கடந்த சில நாள்களில் அப்படி யாரும் எல்லையைக் கடக்க வாய்ப்பில்லை, கடக்கவில்லை' என்று தென்கொரியா தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவின் இந்த அறிவிப்பினால், வடகொரியாவின் கொரோனா பாதிப்பு தொடர்பான சந்தேகப்பார்வை, மிகவும் வலுத்துள்ளது

 

- ஜெ.நிவேதா