அரசு மருத்துவமனைகள், அப்பல்லோ மருத்துவமனைக்கு நிகராக தரம் உயர்த்தப்பட்டுள்ளது- எடப்பாடி பழனிசாமி

அரசு மருத்துவமனைகள், அப்பல்லோ மருத்துவமனைக்கு நிகராக தரம் உயர்த்தப்பட்டுள்ளது- எடப்பாடி பழனிசாமி - Daily news

”திமுக தலைவர் ஸ்டாலின், செல்லும் இடங்களில் எல்லாம் மக்களைப் பார்த்து அதிமுக அரசு ஒன்றும் செய்யவில்லை என்று தொடர்ந்து பொய்ப் பரப்புரையை நிகழ்த்தி வருகிறார். திருச்சியில் 60 மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளன. வாழ்வதற்கு வீட்டுமனை, பயிரிடுவதற்கு நிலமும் இல்லாத ஏழை எளியோருக்கு அதிமுக அரசு அமைந்தவுடன், அரசு தனது சொந்த செலவில் நிலம் வாங்கி அவர்களுக்கு வீடு கட்டி தரும்” என்று திருச்சியில் தேர்தல் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


மேலும் அவர், ‘’நீட் தேர்வு தமிழகத்தில் வரக்கூடாது என்று தொடர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் முயற்சி செய்தார்; அதிமுக அரசும் அதை செய்தது. தமிழக அரசு, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு என்று மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு கொடுத்து அதன் மூலம் 435 மாணவ மாணவிகள் பன்முக மருத்துவர்களாக வெளியே வருவார்கள். தற்போது அரசு மருத்துவமனைகள், அப்பல்லோ மருத்துவமனைக்கு நிகராக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கிராமத்தில் கூறுவதுபோல தர்ம ஆஸ்பத்திரி என்று சொல்ல முடியாது. அடுத்த ஆண்டு மருத்துவப் படிப்பில் முழு ஒதுக்கீட்டின் கீழ் 600 மாணவர்கள் பயன் அடைவார்கள். 


காந்தி மார்க்கெட் தற்போது இருக்கும் அதே இடத்தில் மறுசீரமைப்பு செய்யப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் முழுமையாக தூர்வாரப்பட்டு, கடந்த சில மாதங்களில் பெய்த மழை நீரை முழுமையாக சேமித்து வைத்திருக்கிறோம். இந்தமுறை நிச்சயம் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டது திமுக தலைவர் ஸ்டாலின்தான். ஆனால், தொடர்ந்து அவரே போராட்டம் நடத்தி வருகிறார்.

தொடர்ந்து என்னுடைய முயற்சியினால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதல்வர்களை சந்தித்து கோதாவரி ஆற்றில் இருந்து காவிரி தண்ணீர் கொடுப்பதற்கு வலியுறுத்தி வந்தோம். அந்த முதலமைச்சர்களும் அதற்கு இசைவு தெரிவித்துள்ளனர்” எனப் பேசினார். 

Leave a Comment