உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினசரி 4 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஒரே நாளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரசால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். 

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் 297 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு நிவாரண பணிகள் செய்வதற்காக முதல்வர் பொது கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டி அனைவருக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதனையடுத்து பல அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் கொரோனா நிவாரண நிதி உதவி வழங்கி வருவதை நாம் பார்த்து வருகிறோம். முன்னதாக நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தியின் குடும்பம் ஒரு கோடி ரூபாய் வழங்கிய நிலையில், நடிகர்  அஜித்குமார் 25 லட்ச ரூபாய் வழங்கியிருந்தார். தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவருடன் இணைந்து ஒரு கோடி ரூபாய் நிதியாக வழங்கிய நிலையில் இந்தியாவின்  முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கக்கூடிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முதல் அமைச்சரை நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கி உள்ளார். 

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25-லட்ச ரூபாயை முதல்வர் பொது கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். தொடர்ந்து பல  பல பிரபலங்களும் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். இந்த கடினமான சூழ்நிலையில் மக்களோடு தோளுக்கு தோளாக நிற்கும் வகையில் பல சினிமா பிரபலங்கள் இவ்வாறு நிதி உதவி அளிப்பது மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.