மேற்குவங்க மாநிலத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ ஒருவரின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம், பொது மக்களிடமும் அரசியல் கட்சியினரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்குவங்கம் மாநிலம் ஹெமதாபாத்தைச் சேர்ந்தவர் பா.ஜ.க. எம்.எல்.ஏ தேபேந்திர நாத் ரே. இவர் தனது தனது சொந்த ஊரான பலியாவை அடுத்த பிந்தால் என்ற கிராமத்தில், பூட்டப்பட்டு இருந்த ஒரு மளிகைக் கடையில், தூக்கில் தொங்கிய நிலையில் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார், இந்த சம்பவம் தற்கொலைதானா அல்லது கொலையா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த எம்.எல்.ஏ. கடந்த சில மாதங்களாகவே பொருளாதார நெருக்கடியிலிருந்ததாகவும், அதன் காரணமாக இவரின் நிலத்தைச் சமீபத்தில் இவர் விற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆகவே நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டிருப்பர் என்று எண்ணினாலும், முந்தைய தினம் நள்ளிரவு 1 மணியளவில் ஒருசிலர் இவரின் வீட்டிற்குச் சென்று அவரை அந்நேரத்துக்கு மோட்டார் சைக்கிளில் வெளியே அழைத்துச் சென்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆகவே இது கொலையாகத் தான் இருக்கும் என்றும், அடித்து கொலை செய்யப்பட்டு அவர் தூக்கிலிடப்பட்டிருக்கிறார் என்றும் குற்றம் சுமத்தியிருக்கின்றனர் குடும்பத்தினர். அதைத்தொடர்ந்து, இந்தச் சம்பவம் கொலையாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

சந்தேகத்துக்கு உட்பட்டு சம்பவங்கள் அனைத்தும் இருப்பதைத் தொடர்ந்து, தற்போது, உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராய்கஞ்ச் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் `தேவேந்திரநாத் ராய் எப்படி இறந்தார்' என்பது தெரியவரும் என்று கூறி இருக்கிறார்கள்.

இவர் சார்ந்த கட்சியான பா.ஜ.க., தேபேந்திர நாத் தற்கொலை செய்யவில்லை எனவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கூறியிருக்கிறது. பா.ஜ.க.வின் தலைவர் ஜே.பி. நட்டா தனது ட்விட்டர் பதிவில், "மேற்கு வங்கத்தின் ஹெமதாபாத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. தேபேந்திர நாத் ரே படுகொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இது  மம்தா அரசின்  சட்டம் ஒழுங்கின் தோல்வியைக் காட்டுகிறது" எனக் கடுமையாக கூறியுள்ளார். 

இறந்த எம்.எல்.ஏ தேபேந்திர நாத் ரே, இதற்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் எம்.எல்.ஏ. ஆக இருந்தவர். கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 50-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களுடன் மேற்கு வங்காள பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் முகுல் ராய், கைலாஷ் ஆகியோர் முன்னிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி பாரதீய ஜனதாவில் சேர்ந்தார்.

இந்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்காள கவர்னர் ஜக்தீப் தங்கார், தேவேந்திரநாத் எம்.எல்.ஏ.யின் மரணத்தில் கொலை உள்ளிட்ட சில புகார்கள் எழுந்து இருப்பதாகவும், எனவே இதில் உண்மையைக் கண்டறியப் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என்றும் கூறி உள்ளார்.

இருப்பினும் தேபேந்திர நாத் ரே-வின் இறப்பைத் தொடர்ந்து ஆளும் மம்தா அரசின் மீது விமர்சனங்கள் அதிகமாகி இருக்கிறது. மேற்கு வங்காள கவர்னரான பா.ஜ.க.வை சேர்ந்த ஜக்தீப் தங்கார், `மேற்கு வங்காளத்தில் அரசியல் வன்முறையும், பழிவாங்கும் போக்கும் நீடிப்பதாகவும் ஆனால் அரசு அதை கட்டுப்படுத்துவதற்கான எந்த அறிகுறியும் இல்லை' என்று கூறியிருக்கிறார்.

இதேபோல் கண்டனம் தெரிவித்துள்ள மாநில பாரதீய ஜனதா தலைவர் திலிப் கோஷ், தேவேந்திரநாத் ராய் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.

தேவேந்திர நாத் முதலில் கொலை செய்யப்பட்டு பின்னர் தூக்கில் தொங்கவிடப்பட்டதாக மக்கள் கருதுவதாக அம்மாநில பாரதீய ஜனதா அலுவலகம் தனது ட்விட்டர் பதிவில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்து உள்ளது.

இவற்றைத் தொடர்ந்து, பிரச்னை மிகவும் விவாதத்துக்கு உட்பட்டு வருகின்றது.

- பெ.மதலை ஆரோன்