ஒருதலை காதலால் கல்லூரி மாணவியை பட்டப்பகலில், இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ரம்யா, அங்குள்ள கல்லூரியில் பிடெக் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். 

இந்த சூழலில், அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதான சசி கிருஷ்ணா என்ற இளைஞன், ரம்யாவை ஒருதலையாகக் காதலித்து வந்திருக்கிறார்.

ஆனால், அந்த இளைஞனின் காதலை ரம்யா ஏற்கவில்லை என்று தெரிகிறது. ஆனாலும், சசி கிருஷ்ணா அந்த இளம் பெண் செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்து சென்று தொடர்ந்து காதல் டார்ச்சர் செய்து வந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

தற்போது, கொரோனா ஊரடங்கு உத்தரவிற்குப் பிறகு, ரம்யா நேற்று பகல் நேரத்தில் உணவு வாங்குவதற்காகத் தனது வீட்டின் அருகே உள்ள ஒரு ஓட்டலுக்குச் சென்று உள்ளார். 

அப்போது, அங்கேயே நீண்ட நேரமாகக் காத்திருந்த ஒரு தலை காதலன் சசி கிருஷ்ணா, அங்கு தனது பைக்கில் வந்து, ரம்யாவை திடீரென வழி மறித்து நின்றுள்ளார்.

அத்துடன், “தனது பைக்கில் ஏறும் படி” அந்த இளைஞன் வற்புறுத்தியிருக்கிறான். ஆனால், பைக்கில் ஏற மறுத்த ரம்யா, அங்கிருந்து விலகிச் செல்ல முற்பட்டுள்ளார். இதனால், அவர்கள் இருவருக்குள்ளும் நடு ரோட்டிலேயே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இப்படியாக, பல முறை அழைத்தும் ரம்யா பைக்கில் ஏற மறுத்ததால், அந்த இளைஞன் கடும் ஆத்திரமடைந்து அந்த பட்டப்பகல் நேரத்தில் பொது மக்கள் நடமாட்டம் உள்ள அந்த இடத்தில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரம்யாவை சரமாரியாகக் குத்தி உள்ளார். 

இதில், ரம்யா ரத்தக்காயத்துடன் மயங்கி அங்கேயே கீழே சரிந்து விழுந்தார். இதனைப்பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள், அந்த இளைஞனைப் பிடிக்க முயன்றனர். ஆனாலும், அந்த இளைஞன் அங்கிருந்த பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். 

உடனடியாக, அங்கிருந்த பொதுமக்கள், ரம்யாவை மீட்டு அருகில் உள்ள குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இளம் பெண் ரம்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், “அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக” கூறியுள்ளனர். 

மேலும், இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த குண்டூர் போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். 

அத்துடன், கொலையாளியைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, ரம்யாவை கொலை செய்தது அதே பகுதியைச் சேர்ந்த சசி கிருஷ்ணா என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, அவன் பதுங்கி இருந்த இடத்தையும் தனிப்படை போலீசார் கண்டுபிடித்து அவனை கைது செய்ய முயன்றபோது, கடும் அதிர்ச்சியடைந்த சசி கிருஷ்ணா, பிளேடால் தனது கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளான்.

இதனால், சட்டென்று சுதாரித்துக்கொண்ட போலீசார், அவனை மடக்கிப் பிடித்து கைது செய்து, நரசராவ்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பிறகு, உயர் சிகிச்சைக்காக குண்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சசிகிருஷ்ணா, ரம்யாவை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார் என்றும், அதனை ஏற்க மறுத்த காரணத்தால், ரம்யாவை அவன் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கலாம் என்றும், போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதனிடையே, நாடே சுதந்திர தினம் கொண்டாடிக்கொண்டிருந்த தருணத்தில், நேற்று பட்டப்பகலில் நடுரோட்டில் ஒரு கல்லூரி மாணவி, ஒரு தலை காதலனால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.