திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சிறுமியை திருமணம் செய்ய முயன்ற அக்காவின் கணவர் குறித்து புகார் அளிக்கச் சென்ற போது, போலீஸ் மிரட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் இந்த ஊரடங்கு காலத்தில், இந்தியா முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றச் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கடந்த மாதம் அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளியானது. தற்போது, அந்த புள்ளி விபரங்களுக்கு வலுவூட்டும் வகையில், தமிழகத்தில் சிறுமிக்கு எதிராக மேலும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெரியாங்குப்பம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கு 2 பெண் பிள்ளைகள் இருந்தனர். மூத்த மகள் உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 17 வயதான இளைய மகள் மகேஷ்வரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இருவரையும், மிகவும் ஏழ்மையான சங்கர், மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்து வந்துள்ளார். 

இதில், மூத்த மகள் உமாவை, அந்த பகுதியில் உள்ள ஆலங்காயம் பெத்தூர் பகுதியைச் சேர்ந்த சாந்த குமார் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். 

ஆனால், திருமணத்திற்குப் பிறகு சாந்த குமாருக்கு, தன் மனைவி உமாவின் தங்கை மகேஷ்வரி மீது ஒரு ஈர்ப்பு இருந்துள்ளது. இதனால், மகேஷ்வரி மீது எப்போதும் ஒரு கண் வைத்தார் போல் இருந்து வந்துள்ளார். 

குறிப்பாக, மகேஷ்வரியை எப்படியும் திருமணம் செய்ய வேண்டும் என்று முனைப்போடு இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதனால், சாந்த குமார் - உமா இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.

ஒரு கட்டத்தில், கணவன் சாந்தகுமார், மனைவி உமாவின் தங்கை மகேஷ்வரியை 2 வதாக திருமணம் செய்ய பெரும் முயற்சி எடுத்துள்ளார். அத்துடன், திருமணத்திற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த சாந்தகுமாரின் மனைவி உமா, இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் மணிகண்டனிடம் புகார் அளித்துள்ளார். 

ஆனால், சாந்தகுமாரை கைது செய்யாத காவலர் மணிகண்டன், அப்பாவி சிறுமி மகேஷ்வரியை நேரில் அழைத்து மிரட்டியதாகத் தெரிகிறது. இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான மகேஷ்வரி, தன் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலைக்கு முயன் உள்ளார். 

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், ஓடி வந்து சிறுமியை காப்பாற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, மகேஷ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும், இது தொடர்பாக மருத்துவமனை தரப்பில் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கு வந்து மகளிர் போலீசார்,  பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். 

இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியை மிரட்டிய காவலர் மணிகண்டன் மீது ஆம்பூர் கிராம காவல் நிலையத்தில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், சிறுமியை திருமணம் செய்ய முயன்ற அக்காவின் கணவர் சாந்த குமார் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.