சீனாவின் வுகான் நகரிலிருந்து தோன்றி, இன்று உலகம் முழுக்க கொரோனா வைரஸ் 210-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.
 
இதுதொடர்பாக போரிஸ் ஜான்சன் கூறியுள்ளதாவது:

``கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இங்கிலாந்தில் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது இங்கிலாந்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இனி மேலும் பள்ளிகளை மூடுவது நல்லதல்ல. பள்ளிகளில் மாணவர்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பான விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்களின் பள்ளிப் படிப்பு தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது.

இனி ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டாலும் பள்ளிகள் மூடல் என்பது கடைசி பட்சமாக இருக்கும். மாணவர்கள் தங்கள் கல்வியை தவறவிட்டால் நாடு பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ளும். எனவே கொரோனா பரவல் முற்றிலும் குறையாமல் இருந்தாலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் படிப்பினை தொடர வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இதேபோல பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதற்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால திட்ட அமைப்பின் இயக்குனர் மைக் ரையான் பதிலொன்றை அளித்தார். அதில், ``அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராதநிலையில், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறப்பு குறித்து பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகே அந்தந்த நாடுகள், மாநிலங்கள் முடிவெடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்தியாவை பொறுத்தவரையில் தற்போது பொதுமுடக்கத்தின் அன்லாக் 3 நடைமுறையில் உள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அமலில் உள்ள நிலையில் செப்டம்பர் 1முதல் அடுத்த கட்ட தளர்வுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்நிலையில் செப்டம்பர் 1 முதல் நவம்பர் 14 வரை பள்ளிகளை வெவ்வேறு கட்டங்களாக திறக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் முதலில் இதை நடைமுறைப்படுத்தலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இறுதி முடிவை சம்மந்தப்பட்ட மாநிலங்களே எடுக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில்  பள்ளிகள் திறப்பு எப்போது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, கொரோனா பாதிப்பு குறைந்த பின்னரே அது பற்றி பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பாதிப்பு ஆறாயிரத்துக்கும் குறைவாக பதிவாகியுள்ளது. மேலும் சென்னையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. ஆறுதலான தகவலாக இருந்தாலும் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பில் அடுத்த அலை உருவாகும் எனவும் அது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது.

இதனால் மத்திய அரசு ஆலோசிப்பதாக கூறப்படும் செப்டம்பர் 1 முதல் நவம்பர் 14 வரையிலான காலகட்டங்களில் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது