1930-களில் ராஜஸ்தானிலிருந்து வந்த பிஜிலி சிங் குடும்பத்தினரால் நான்கு தலைமுறைகளாக இருட்டுக்கடை நடத்தப்பட்டு வருகிறது. இருட்டுக்கடை அல்வா பிற கடைகளின் அல்வாவை விட, தனித்தன்மையையும்,  சிறந்த சுவையையும் கொண்டது.

திருநெல்வேலியின் அடையாளங்களுள் ஒன்று அல்வா. அதிலும் முக்கியமாக, இருட்டுக் கடை அல்வா என்றால் மிகவும் பிரபலம். கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவந்த அல்வா கடை, நெல்லையின் அடையாளமாகவே மாறிப்போயுள்ளது. நெல்லையப்பர் கோயிலின் எதிரில் உள்ள இந்தக் கடைக்கு விளம்பரப் பலகைகூட கிடையாது. 40 வாட்ஸ் குண்டு பல்ப் வெளிச்சத்தில் மட்டுமே இந்த இருட்டுக் கடை செயல்பட்டு வருகிறது. 

இங்கு சுமார் 3 மணி நேரம் மட்டுமே தொடங்கப்படும் வியாபாரம் வெகு விரைவில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, மாலையில் சுமார் 5 மணிக்குத் தொடங்கும் வியாபாரம் இரவு 8 மணிக்குள் முடிவடைந்துவிடும். அன்றன்று தயாரிக்கப்படும் அல்வாவை அன்றே விற்பனை செய்துவிடுவது வழக்கம். இந்தக் கடையில் அல்வா வாங்குவதற்குக் கூட்டம் அலைமோதும் என்பதால் எப்போதும் காவல்துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த அங்கு இருப்பார்கள்.

தற்போதைய கொரோனா சூழ்நிலையில், கடையின் உரிமையாளராக இருந்த ஹரிசிங் என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மனஅழுத்தத்தில் இருந்த அவர், தன்னால் கடையின் நற்பெயர் கெட்டுவிட்டதாக வேதனையடைந்தார். எனவே, கடந்த 25-ம் தேதி மருத்துவமனையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் இருட்டுக்கடையை மூட வேண்டும் என்று கடந்த 25-ம் தேதி உத்தரவிட்டனர். மேலும், கடை மூடப்பட்டு,  அந்தப் பகுதி முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. கடை மூடப்பட்டது அறியாமல் தினமும் ஏராளமானோர் அல்வா வாங்கச் சென்று ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது 20 நாட்களுக்குப் பின், மாநகராட்சி விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு, 14-ம் தேதி நேற்று மாலை முதல் இருட்டுக்கடை அல்வா விற்பனை மீண்டும் தொடங்கியிருக்கிறது. தற்போது இந்தக் கடையை மறைந்த ஹரிசிங்கின் மகள் வழிப்பேரனான சூரஜ்சிங் கடை விற்பனையைக் கவனித்து வருகிறார். நேற்று முன்னறிவிப்பின்றி கடை திறக்கப்பட்டபோதும் வழக்கம்போல மக்கள் கூட்டம் அலைமோதியது.

தற்போது கடை திறக்கப்பட்ட நிலையில், சூரஜ்சிங் கூறுகையில், 'இந்த கடை நான்கு தலைமுறைகளாக எங்கள் குடும்பம் நடத்திய கடை. இந்த கடையைக் கவனித்துக் கொண்ட என் தாத்தா மிகவும் சுத்தமாகவும்,  நேர்மையாகவும் கடையை நடத்தி வந்தார். அவருக்கு அடுத்து நானும் அவரை போலக் கடையை நடத்துவேன். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாஸ்க் மற்றும் கையுறை அணிந்து அனைவரும் பணியாற்றுகிறோம். எங்கள் கடையில் ஏற்கெனவே இருந்த தரமும் ருசியும் தொடர்ந்து இருக்கும். அதில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

- பெ. மதலை ஆரோன்.