கோவிட் - 19 கொரோனா வைரஸ் பாதிப்பானது, உலகளவில் இதுவரை 13 கோடிக்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இறப்பு எண்ணிக்கையும், ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இதுவரை உலகளவில் 5.75 லட்சத்துக்கு மேற்பட்டோர் இந்த கோவிட் - 19 கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றார்கள். இந்தியாவிலும், பாதிப்பு எண்ணிக்கையானது தற்போது 9 லட்சம் என்று உயர்ந்திருக்கிறது.

மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்கா, இன்னும் மோசமாகிக் கொண்டே போகின்றது.

கொரோனா பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு 34,79,483 கொரோனாவால் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் மட்டும் 1.38 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும்கூட மற்ற நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், அமெரிக்காவில் அதிக அளவில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வதால் தொற்று எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வருகிறார்.

பாதிப்பு பட்டியலில் முன்னனியில் இருக்கும் பிற நாடுகளான ரஷ்யா, சீனா, இந்தியா, பிரேசில் நாடுகளை ஆகிய நாடுகளை விட அமெரிக்காவில் அதிக அளவிலான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக அதிபர் ட்ரம்ப் நேற்றைய தினம் கூறியுள்ளார். அதேபோல பாதிக்கப்பட்டவர்களை ஒப்பிடுகையில் அமெரிக்காவில் இறந்தவர்களும் குறைவுதான் என்பதால், அமெரிக்காவில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி விரிவாகப் பேசிய அவர், `‘அமெரிக்கா அளவிற்கு வேறு எந்த நாடும் கொரோனா பரிசோதனைகளை தீவிரமாக மேற்கொள்ளவில்லை. சில நாடுகளிலெல்லாம் உடல்நலம் சரியில்லாதவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வருபவர்களுக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்கிறார்கள். ஆனால் அமெரிக்கா அப்படியல்ல.

பிற நாடுகளில் கொரோனா நோயாளிகள் குறைவாக இருப்பதற்கும், அமெரிக்காவில் அதிகமிருப்பதற்கும் பின்னணி இதுதான். ஒருவேளை நாங்களும் மற்ற நாடுகளை போல் குறைவான பரிசோதனை மேற்கொண்டிருந்தால், இங்கும் தொற்று எண்ணிக்கை குறைவாக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் அப்படியொரு நற்பெயரை நோக்கி செல்லவில்லை. பிரேசிலை பொறுத்தவரை, அங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும், அவர்கள் எங்களை போல் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வதில்லை. ஆகவே அமெரிக்காவில்தான் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது என்று நான் உறுதியாக சொல்வேன். கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியிலும், அமெரிக்கா மிக தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. விரைவில் அதுபற்றிய நல்ல தகவல்கள் வெளிவரும்.

இவை அனைத்துக்கும் காரணமான சீனா உலக நாடுகளுக்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்பை, என்னால் என்றும் மறக்க முடியாது" என்று கூறியிருக்கிறார்.

சீனா குறித்து இவ்வளவு கடுமையாக ட்ரம்ப் சொல்வதற்கான காரணமாக, வூஹானின் இரண்டு விஞ்ஞாணிகள் இப்போது அமெரிக்காவின் வசம் இருப்பதே காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த இருவரும், சீனாதான் கொரோனாவை பரப்பியது என்பதற்கு ஏதேனும் ஒரு வகையில் உதவியாக இருப்பார்கள் என உறுதியாக நம்புகிறார் ட்ரம்ப்.

ட்ரம்ப்பின் இந்த பேச்சுக்கு முன்னதாக, உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் டெட்ராஸ் அதேநாம், ``சில நாடுகள் சரியாக கொரோனாவை சரியாக கையாளவில்லை. இதேநிலை நீடித்தால் மிக மிக மோசமான பாதிப்பு ஏற்படும்" எனக்கூறியிருக்கிறார். எந்த நாடு சரியாக செயல்படவில்லை என்பதை குறிப்பிட்டு சொல்லாத அவர், அமெரிக்காவைத்தான் மறைமுறைகமாக சாடியிருப்பதாக பலரும் விமர்சனங்கள் வைத்திருந்தனர்.

குறிப்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரேவும் இத்தனை நாள்களாக மாஸ்க் அணியாமல் இருந்தது - அமெரிக்காவில் கொரோனா பார்ட்டி ஆங்காங்கே நிகழ்ந்தது - அமெரிக்காவில் மாஸ்க்குக்கு எதிரான பரப்புரை வேகமாக பரப்பட்டத்து - உலக சுகாதார நிறுவனத்தை குறை கூறியது போன்றவற்றை அடிப்படையாக வைத்து உலக சுகாதார நிறுவனத்தினர் இதை குறிப்பிட்டிருப்பர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேநாம்மின் பேச்சுக்கு, ட்ரம்ப்பின் பதிலாகவே இப்போதைய இந்த பேட்டி இருக்கும் என்று அரசியல் உலகம் சொல்லி எதிர்ப்பார்க்கிறது.

- ஜெ.நிவேதா