கோவிட் - 19 கொரோனா வைரஸின் பாதிப்பு, ஒவ்வொரு நாளும் அதிகரிப்பதை காணும்போது அனைவருக்கும் கூடவே ஒருவித பயம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. இன்றைய தேதிக்கு, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 25,000 க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் பதிவாகி வருகின்றனர். இந்தியாவில் என்றில்லை, உலகம் முழுக்கவே மோசமான நிலையே நிலவிவருகின்றது.

அதில் மிக மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்கா, இன்னும் மோசமாகிக் கொண்டே போகின்றது. ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸின் வீரியம் குறித்துப் பேசும் உலக சுகாதார நிறுவனத்தினர் நேற்றைய தினம் ஜெனிவாவில் பேசியிருக்கிறார்.

அப்படி உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் டெட்ராஸ் அதேநாம் பேசுகையில்,

"சுகாதாரம் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்காவிட்டா கொரோனா வைரஸ் மிக மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பேசும்போது,

ஐரோப்பியா, ஆசிய நாடுகள் பல கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டுள்ளன. அது ஆரோக்கியமான விஷயமாக இருக்கிறது. இருப்பினும் பல நாடுகள் தவறான திசையில் சென்று கொண்டிருக்கின்றன. எந்த நாடுகள் என்று சொல்ல விரும்பவில்லை.

ஒரேதினத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளி எண்ணிக்கையெல்லாம் இங்கு இருக்கின்றன.  75% நோயாளிகள், குறிப்பிட்ட சில நாடுகளில் அதிகமாக இருக்கிறது. அதிலும், பெரும்பாலும் அமெரிக்க, ஆசிய நாடுகளில் அதிக நோயாளிகள் பதிவாகி இருக்கின்றனர்.

இப்போதிருந்தே அனைத்து நாடுகளும் அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் பின்பற்றாமல் போனால் கொரோனா அதன் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும். இப்போது இருக்கும் நிலைமையைவிட படுமோசமாக உச்சகட்ட மோசமான அழிவை ஏற்படுத்தும்.

நாங்கள் சொல்ல விரும்புவது என்னவென்றால், அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் அனைவரும் பின்பற்றாமல் போனால் கொரோனா அதன் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும். அது, இப்போது இருக்கும் நிலைமையைவிட படுமோசமாகி, உலகின் உச்சகட்ட மோசமான அழிவை ஏற்படுத்தும்.

உலக நாடுகள் அனைத்தும், இப்போதிருந்தே விழிப்பு உணர்வோடு செயல்படுவது நல்லது. கிருமி பரவத் தொடங்கி ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதென நினைத்து, பல நாடுகள் தளர்வுகளுக்குள் செல்கின்றன. ஆனால் எந்த ஒரு நாடும் தளர்வுகளை அமல்படுத்த வேண்டிய நேரம் இதுவல்ல. உடனடியாக கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அனைவரும் அதிகப்படுத்த வேண்டும்" எனக்கூறியிருக்கிறார்.

இதேபோல அறிஞர்கள் பலரும், "பள்ளிகளைத் திறப்பதை உலக நாடுகள் தள்ளிப்போடுவது, அனைவருக்கும் நல்லது. கூட்டம் கூடும் இடங்களை அனைவரும் தவிர்க்க வேண்டும். மாஸ்க் அணிவது ரொம்பவும் அவசியம்" எனக்கூறி வருகின்றனர். அமெரிக்கா இதற்கிடையில் பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதை தொடர்ந்து, அறிஞர்களின் இந்த வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதேநாம், அமெரிக்காவைத்தான் குறிப்பிட்டு சொன்னதாக சொல்லி, பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ட்ரம்ப், தானே மாஸ்க் அணியாமல் இருந்தது - அமெரிக்கா முழுக்க மாஸ்க் பற்றிய தவறான பரப்புரைகள் பரப்பட்டது - கொரோனா பார்ட்டி தரப்பட்டது போன்றவற்றை அடிப்படையாக வைத்துதான், உலக சுகாதார நிறுவனம் இதை கூறியிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

ட்ரம்ப், சீனா மீதும் உலக சுகாதார நிறுவனத்தின் மீதும் கடந்த சில மாதங்களாகவே குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார். உலக சுகாதார நிறுவனத்திலிருந்து விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதுபற்றி நேற்று பேசியிருந்த அதேநாம், அமெரிக்கா விலகுவது தொடர்பான முறையான நோட்டீஸ் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை என்று கூறிவிட்டார்.

இதைத் தொடர்ந்து, விரைந்து அமெரிக்கா இதுதொடர்பான தனது நிலைபாட்டை தெரிவிக்கும் என்று எதிர்ப்பார்க்ப்படுகிறது.