இந்தியாவில் கடந்த சில வாரங்களாக தென் மாநிலங்களில் கொரோனாவின் தீவிரம் சற்று குறைகிறது. இருப்பினும் சில வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தும் வருகிறது. எனவே, கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசியின் முக்கியத்துவம் முன்பைவிடவும் அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய ஏழு நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அந்த நிறுவனங்களின் தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதித்து பார்ப்பது, 2 மற்றும் 3-வது கட்டங்களில் இருக்கிறது. பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவதற்கான மசோதா ஜப்பான் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேறியது.

இதற்கிடையில், கொரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் உலகின் பல நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசி தயாரிப்பதில் சீனா, இந்தியா, கனடா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்படும் பட்சத்தில் அதனை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் எனும் கோரிக்கையும் ஒருபக்கம் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜப்பான் நாட்டில் கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க பொதுநிதியைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை அந்நாட்டு அமைச்சரவை கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி வழங்கியது.

இந்நிலையில் புதன்கிழமை கொரோனா தடுப்பூசியை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்குவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. ஜப்பான் தற்போது அஸ்ட்ராஜெனெகா பி.எல்.சி மற்றும் ஃபைசர் இன்க் உள்ளிட்ட நிறுவனங்களிடம் தடுப்பூசியைப் பெறுவதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போதைக்கு உலகளாவிய தடுப்பூசி பணிகளில், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக தடுப்பூசி தான் முன்னிலையில் இருக்கிறது. தடுப்பூசிகளை பொறுத்தவரை, அவரை ஃபைசர் மற்றும் மாடெர்னா நிறுவன வகை தடுப்பு மருந்துகள் மிகக் குளிரான வெப்பநிலையில் பராமரிக்கப்பட வேண்டும் என்ற நிலை இருந்தது. அவ்வாறு பராமரிப்பது கடினம் என்பதால் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஸெனெகா நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்த தடுப்பூசி நம்பிக்கைக்குரிய ஒன்றாகப் பார்க்கப்பட்டது. ஆனால், பரிசோதனையில் இரண்டு டோஸ்கள் பெற்ற தன்னார்வலர்களைக் காட்டிலும், ஒரு டோஸ் மட்டுமே பெற்றவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதாக முடிவுகள் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தடுப்பூசி பரிசோதனையை மீண்டும் முதலில் இருந்து நடத்த உள்ளதாக அஸ்ட்ரா ஸெனெகா அறிவித்துள்ளது.

முன்னதாக, இந்த தடுப்பூசியின் உற்பத்திக்கு ஆஸ்திரேலியாவின் சிஎஸ்எல் நிறுவனம், ஆஸ்ட்ரா ஸெனகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. பரிசோதனைகள் வெற்றிகரமாக நிறைவடையும் பட்சத்தில் அடுத்த ஆண்டின் முற்பகுதியில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று சிஎஸ்எல் நிறுவனம் தெரிவித்தது.

உலகம் முழுவதுமே இப்படியாக தடுப்பூசியின் தேவைகள் அதிகமாகி வருகிறது. நாடுகளும், தடுப்பூசியை இலவசமாக தருவது குறித்து மும்மரமாக ஆலோசித்து வருகின்றன.