கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னையில் பா.ம.க. போராட்டம் நடத்தியது. இதில் கலந்துகொள்ள வெளி மாவட்டங்களிலிருந்து வந்த பா.ம.க. தொண்டர்கள் சென்னை மற்றும் புறநகரில் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதோடு, பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்த ரயிலின் மீது கற்களைக் கொண்டு தாக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 


அதேபோல், சென்னை அண்ணாசாலையில் உள்ள தாமஸ் மன்றோ சிலை அருகே பா.ம.க. சார்பில் வன்னியர்களுக்கு தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


சென்னைக்கு வரும் வழியிலேயே ஆங்காங்கே பா.ம.க. வினர் தடுத்து நிறுத்தப்பட்ட போதிலும் பலர்  சென்னை அண்ணாசாலை வந்தடைந்தனர். பின்னர் பல்லவன் இல்லம் அருகே இருந்து தாமஸ் மன்றோ சிலை அருகே வரை சென்று 20 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். மேலும் பெருங்களத்தூர், தாம்பரம் பகுதிகளில் பல மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். 


இந்த ஆர்பாட்டம்  காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸை நேரில் சந்திக்க அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி ஆகியோர் தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.


பேச்சுவார்த்தைக்கு பின் பேசிய முதல்வர் , ‘’ சாதி வாரியாகன புள்ளிவிவரங்களைச் சேகரித்து அறிக்கை அளிக்க தனி ஆணையம் அமைக்கப்படும். 69% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. வழக்கை எதிர்கொள்ளப் புள்ளிவிவரங்கள் தேவை. சாதிவாரியாக புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதால் மட்டுமே முழு தகவல் கிடைக்கும். இதன் பின்னரே முடிவு எடுக்க முடியும் என்றியிருக்கிறார். 


போராட்டம் குறித்து பேசிய அன்புமணி, ‘’ நாற்பது ஆண்டுக்காலமாக  நியாயமான கோரிக்கைக்காக நாங்கள் போராடிவருகிறோம். இன்றளவும் ஒரு தீர்வு கிடைக்கவில்லை. தமிழகத்தில் நாங்கில் ஒரு பங்கு வன்னியர்கள் இருக்கிறார்கள். வன்னியர்கர்  கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், சமூகத்திலும் மிகப் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள்.  இந்தச் சமூகம் முன்னேறினால்தான் தமிழகம் முன்னேற்றம் அடையும் என்று இதை தமிழக வளர்ச்சிப் பிரச்னையாக இதைப் பார்க்க வேண்டும்.இது குறித்து முதல்வர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறோம்” என பேட்டி அளித்திருந்தார். 


இந்நிலையில் நேற்றை ஆர்பாட்டத்தில், வன்முறையில் ஈடுப்பட்டு காரணங்களுக்காக போராட்டத்திற்கு தலைமை தாங்கிய அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட 856 பாமகவினர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்  பதிவு செய்துள்ளனர்.