கொரோனா வைரஸால் உலகமே தடுமாறிக் கொண்டிருக்கிறது. இப்படியான நேரத்தில், அடுத்து என்ன என்ற கேள்விதான் இன்று உலகம் முழுக்க நிலவிவருகின்றது. இப்படியிருக்கும் சூழலில், கொரோனாவுக்கான தடுப்பூசி மற்றும் மருந்து பற்றிய பல செய்திகள் தொடர்ச்சியாக வந்துக்கொண்டிருகின்றன. 

இப்படியான நிலையில்தான், உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகள், தொடர்ச்சியாக மக்களை சந்தித்து உலகில் என்ன நடக்கிறது என்பது குறித்து பேசி வந்தார்கள். இப்படி பேசியவர்களில், உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ராஸ் அதேனோம்மும் ஒருவர்.

கடந்த வாரத்தில் ஒருநாள் இவர் பேசும்போது, `` ஐரோப்பியா, ஆசிய நாடுகள் பல கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டுள்ளன. இருப்பினும் பல நாடுகள் தவறான திசையில் சென்று கொண்டிருக்கின்றன.

அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் பின்பற்றாமல் போனால் கொரோனா அதன் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும். இப்போது இருக்கும் நிலைமையைவிட படுமோசமாக உச்சகட்ட மோசமான அழிவை ஏற்படுத்தும்" என்று கூறியிருந்தார்.

தன்னுடைய அந்தப் பேட்டியில், அவர் அமெரிக்காவை குறிப்பிட்டிருக்கலாம் என்றும், அமெரிக்கா உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவது தொடர்பான முறையான நோட்டீஸ் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை" என்றும் கூறியிருந்தார்.

இந்த விஷயத்தில் அமெரிக்கா குறித்து டெட்ராஸ் பேசுவதற்கு, ஒரு காரணம் உள்ளது. விஷயம் என்னவெனில், கொரோனா வைரஸ் சீனாவில் இருந்துதான் உலக நாடுகளுக்கு பரவியது. இருப்பினும் இது தொடர்பான உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு எடுக்கவில்லை என்பது அமெரிக்காவின் புகார். அந்தப் புகார் பற்றி உலக சுகாதார நிறுவனம் பேசவில்லை என்பதால், ட்ரம்ப் சார்பில் நிறைய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வந்தது. அதன் நீட்சிதான், இந்த விலகல். அதோனாம்மின் பேட்டிக்கு பிறகு, உலக சுகாதார அமைப்பில் இருந்தே விலகுவதாகவும் அமெரிக்கா அறிவித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார நிறுவனத்தின் மீது நடவடிக்கைகளை மேற்கொண்ட ட்ரம்ப்பால், மேற்கொண்டு சீனா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை. ஏனெனில், சீனாதான் வைரஸை பரப்பியது என்று இன்னமும் உலக மேடையில் நிரூபனமாகவில்லை. அதனால் இப்போதைக்கு, இது வதந்திதான். எப்படியாவது தன் பக்க நியாயத்தை நிரூபிக்க ட்ரம்ப் போராடிக் கொண்டிருக்கிறார்.

இப்படியான சூழலில்தான், நேற்றைய தினம் உலக சுகாதார நிறுவனத்தில் மருத்துவர் மைக் ரேயான் மீண்டும் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர், ``இந்தியா, யுனைட்டட் ஸ்டேட்ஸ், பிரேசில் ஆகிய நாடுகள் கொரோனா பரவல் விஷயத்தில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இவர்கள் அனைவரும், இப்போது கொரோனாவை கையாள கற்றுக் கொண்டுவிட்டனர். ஆகவே இவர்களெல்லாம் இனிவரும் நாள்களிலும் கொரோனாவை எப்படியாவது கையாண்டுவிடுவார்கள்.

கொரோனா தடுப்பு மருந்தை 2021-ம் ஆண்டுக்கு முன் எதிர்பார்க்க முடியாது.  பல்வேறு நாடுகளில் தடுப்பு மருந்து சோதனை முழுவீச்சில் நடைபெறுவகிறது. தற்போது, பல நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பு மருந்துகள் 3-ம் கட்ட பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளது. இருந்தாலும், முழுமையான சோதனைக்கு பிறகே அவை விநியோகத்திற்கு வரும் . அவற்றின் பயன்பாட்டை அடுத்த ஆண்டில் மட்டுமே எதிர்பார்க்க முடியும்.

நாட்டின்  பொருளாதாரத்தை சார்ந்து இல்லாமல், தேவையை பொறுத்து தடுப்பூசி விநியோகத்தை உறுதிசெய்ய செயல்பட்டு வருவதாகவும், தடுப்பூசி கிடைக்கும் வரையில் நோய்தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம்" எனக்கூறியுள்ளார்.

மிகமுக்கியமான இந்த அறிவிப்பு, அமெரிக்காவை நேர்த்தியாக செயல்படும் நாடுகளின் பட்டியலில் உலக சுகாதார நிறுவனமேவும் இணைப்பது போல உள்ளதாக பலரும் கூறி வருகிறார்கள்.

அமெரிக்காவில் இதுவரையில், 4 மில்லியனுக்கு மேற்பட்ட நோயாளிகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஒரு மணிநேரத்துக்கு 2,600 பேர் என்ற சராசரியில் நோயாளிகள் குணமாகி வீடுதிரும்பி வருகின்றனர்.

 

- ஜெ.நிவேதா