இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில், கர்நாடகாவுக்கு மிகமுக்கியமான இடமுண்டு. பின்னுக்கு முன் ஏராளமான முரண்கள் நிலவிவரும் சூழலில், கர்நாடகா ஒவ்வொரு நாளும் மோசமான நிலையையே எட்டிவருகின்றது.

அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சரேவும், ``இனி கடவுள்தான் நம்மை காப்பாற்ற வேண்டும்" என்று சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். காங்கிரஸ்ஸை சேர்ந்த உறுப்பினர் ஒருவர், ``மது அருந்தி, முட்டை சாப்பிட்டால் கொரோனா உடலில் அழியும்" என்று கூறியிருந்தார். இப்படி மோசமான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டிருக்கும் நேரத்தில், ``கொரோனா நோய்த்தொற்றுக்கு ஊரடங்கு தீர்வாகாது. ஆகவே இனி இங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படாது. முகக்கவசம் அணிவதும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதுமே தீர்வாகும்" எனக் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

அம்மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு உயிரிழந்துள்ளனர். பெங்களூருவில் மட்டும் 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடக்கத்தில் பெருநகரங்களில் பெங்களூருதான் சிறப்பாகச் செயல்படுவதாகச் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அந்த இடமேவும் இப்படி மாறியிருப்பது மிகப்பெரிய சர்ச்சையாகி உள்ளது.

இந்நிலையில், கொரோனாவைக் கட்டுப்படுத்த கடந்த 14-ம் தேதி முதல் 22-ம் தேதி (இன்று) காலை 5 மணிவரை பெங்களூருவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதே போல, மைசூரு, கல்புர்கி உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் கடந்த ஒரு வாரம் ஊரடங்கு அமலிலிருந்தது. இருப்பினும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் 4,000-ஐக் கடக்கிறது. இதனால் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய எதிர்க்கட்சிகள் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தன.

இந்நிலையில், முதல்வர் எடியூரப்பா நேற்று மாலை தொலைக்காட்சி நேரலை வாயிலாக பொதுமக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

"கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கடந்த ஒரு வார காலமாக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கினால் நல்ல பலன் கிடைத்தது. பெங்களூரு மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களிலும் தொற்றுப் பரவல் வேகம் ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது. அதனால் இனி ஊரடங்கு தேவையில்லை. பெங்களூருவில் நோய் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள 6,160 பகுதிகளில் ஊரடங்கு அமலில் இருக்கும். பிற மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் இந்த முடிவைப் பின்பற்றலாம்.

ஊரடங்கு, நிச்சயம் கொரோனாவுக்குத் தீர்வு ஆகாது. அனைவரும் முகக்கவசம் அணிவதும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதுமே தீர்வு ஆகும். மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தாலே கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுத்துவிடலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் நடத்திய ஆய்வில் ஒவ்வொரு கொரோனா நோயாளிக்கும் சராசரியாக 47 பேருடன் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.

அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தால் மற்றவர்களுக்குத் தொற்று பரவியிருக்காது. நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சை வசதிகளும், மருத்துவமனை படுக்கைகளும் உள்ளன. பெங்களூருவில் தனியார் மருத்துவமனைகளில் 11 ஆயிரத்து 230 படுக்கைகள் புதியதாக ஒதுக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களிலிருந்து வந்தவர்களால் இங்கேயும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்தது.

கொரோனா நோயின் காரணமாகப் பிறப்பிக்கப்படும் ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் ஒழிப்பு மற்றும் பொருளாதாரச் சமநிலை இரண்டையும் ஒன்றாகத்தான் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியுடன் தங்களது பணிகளை மேற்கொண்டால் இரண்டையும் சரியாகக் கையாள முடியும்"

என்று கூறியுள்ளார். 

முதல்வரின் இந்தப் பேச்சுக்கு, பலதரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. ஏனெனில், உலக சுகாதார நிறுவனமேவும், `ஊரடங்கு கொரோனாவை முழுமையாகத் தடுக்காது என்றாலும், இப்போதைக்கு யாரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டாம். இல்லையெனில் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்' எனக்கூறி இருக்கின்றது. அப்படியிருக்கும்போது, முதல்வர் இப்படிச் சொல்வது முரணான கருத்தாகப் பார்க்கப்படுகிறது.

 

- ஜெ.நிவேதா.