பிரபல கலை இயக்குனர் சாபு சிரிலின் உதவியாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய சுனில் பாபு 'பெங்களூர் டேய்ஸ்' , 'அனந்த பத்ரம்' , 'காயம்குளம் கொச்சுன்னி' , 'பழசிராஜா' , 'உருமி' , 'சோட்டா' மும்பை' , 'பிரேமம்' , 'நோட்புக்' , 'ஆமி' போன்ற முக்கிய படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இதில் அவர் ‘அனந்த பத்ரம்’ படத்திற்கு சிறந்த கலை இயக்குனருக்கான கேரள மாநில அரசு விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

100 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய சுனில் பாபு 'எம். எஸ்.தோனி' , 'கஜினி' போன்ற முக்கிய படங்களிலும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் வரும் ஜனவரி 11 பொங்கலையொட்டி வரவிருக்கும் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’ படத்திற்கும் சுனில் பாபு கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

தீடீர் ஏற்பட்ட மாரடைப்பால் கேரளா எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சுனில் பாபு. பின் சிகிச்சை பலனின்றி இறந்தார் என தகவல் வெளியாகி அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது. சமகால இந்திய சினிமாவில் சிறந்த கலை இயக்குனர்களில் ஒருவரானவர் சுனில் பாபு. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழி துறையிலும் ஆகச்சிறந்தவராய் விளங்கிய கலை இயக்குனர் சுனில் பாபுவின் இழப்பு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியது, அதன்படி திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்,

குறிப்பாக சுனில் பாபு பணியாற்றிய கடைசி படமான 'வாரிசு' படத்தின் இயக்குனர் வம்சி, சுனில் பாபுவின் இழப்பு குறித்து “எங்களுக்கு வெற்றிடத்தை விட்டு சென்றுள்ளீர்கள் சுனில் சார்.. எங்களுக்கு ஒரு நல்ல சகோதரனாகவும், ஆத்ம தோழனாகவும் இருந்தீர்கள்.உங்கள் உழைப்பின் விதத்தை போல் இன்று சத்தமில்லாமல் மறைந்து விட்டீர்.. நீங்கள் வடிவமைத்த ஒவ்வொரு படத்திலும் நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.. உங்களை மிஸ் செய்வேன்..ஓம் சாந்தி..” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாரிசு தயாரிப்பு நிறுவனம் வாரிசு படக்குழு சார்பில் சுனில் பாபு மரணத்திற்கு தங்களது வருத்தங்களை தெரிவித்தனர். அதில்,

“நீங்கள் ஒரு அற்புதமான நபராக இருந்தீர்கள், உங்களுடன் பணியாற்றியதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். ஒரு மனிதன் இந்த உலகத்தை விட்டு வெளியேறலாம், ஆனால் அவனது மரபு அவனது செயல்களின் மூலம் தொடரும். என்ற பழமொழி சொல்வது போல் இருந்தீர்கள். இன்று உங்களை இழந்த வலி தாங்குவது கடினம், ஏனென்றால் இந்த உலகத்திற்கு நீங்கள் இன்னும் சில வருடங்கள் தேவைப்பட்டீர்கள். சுனில் சாபு குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள், எங்களது எண்ணங்களும் பிரார்த்தனைகளையும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். எப்போதும் நம் மனதில், எப்போதும் நம் இதயத்தில் சுனில் பாபு". என்று குறிப்பிட்டனர்.

Rest in peace Sunil Babu sir pic.twitter.com/QO3ys90lvj

— Sri Venkateswara Creations (@SVC_official) January 6, 2023