தமிழில் வெளியாகி ஹிட்டித்த 'கைதி' படம் இந்தியில் ரீமேக்காகி வரும் நிலையில், அதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த 2019ல் வெளியாகி மாஸ் ஹிட்டித்த திரைப்படம் கைதி. கதாநாயகி, பாடல்கள் என்ற எந்த கமர்ஷியல் அம்சங்களும் இன்றி சுவாரசியமான வகையில் அமைந்திருந்த இத்திரைப்படம் மாஸ் ஹிட்டித்து. தனது முதல் படமான மாநகரம் மூலம் தனித்துவ இயக்குநர் என்று கவனிக்கப்பட்ட லோகேஷ், இதன் மூலம் தமிழின் முக்கிய இயக்குநர்கள் பட்டியலில் இணைந்தார்.

இந்நிலையில், தமிழில் ஹிட்டடித்த 'கைதி' படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தை நடிகர் அஜய் தேவ்கன் இயக்கி தயாரித்து ஹீரோவாக நடிக்கிறார். மேலும் அஜய் தேவ்கனுடன் இணைந்து இப்படத்தை பூஷன் குமார், கிருஷ்ணன் குமார், எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபுவின் Dream Warrier Pictures மற்றும் Reliance Entertainment ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

'போலா' எனப் பெயரிடப்பட்ட இப்படத்தில் அஜய் தேவ்கனுடன் இணைந்து தபு, அமலா பால், அபிஷேக் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர். தமிழில் நரேன் நடித்த கதாபாத்திரத்தில் இந்தியில் தபு நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் அமலா பால் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

அசீம் பஜாஜ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். மேலும் தர்மேந்திர ஷர்மா இப்படத்தின் படத்தொகுப்புப் பணிகளை கவனித்துக்கொள்கிறார். சந்தீப் கேல்வானி மற்றும் ஆமில் கேயன் கான் இப்படத்திற்கு திரைக்கதை அமைக்கின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பரில் 'போலா' படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், தொடர்ந்து நடைபெற்றுவந்த 'போலா' படத்தின் படப்பிடிப்பு தற்சமயம் முடிவடைந்துள்ளதாக இதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பையும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள எஸ்.ஆர்.பிரபு, "போலா படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தன. மேலும் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் மார்ச் 30ல் திரையரங்குகளுக்கு வருகிறோம்" என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் போலா படம் மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாவது உறுதியாகியுள்லது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் கமர்ஷியல் அம்சங்கள் ஏதுமின்றி வெளியான கைதி படம், இந்தியில் எந்தமாதிரியான மாற்றங்களுடன் வெளியாகப்போகிறது என்பது பற்றி தெரியவில்லை. படம் பற்றிய மேற்பார்வை டிரெய்லர் வெளியானதும் தெரிந்துவிடும். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பகிர்வு உங்கள் பார்வைக்கு

 

 

View this post on Instagram

A post shared by S R Prabhu (@prabhu_sr)