ஒடிடி தளங்கள் இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின் அபாரமாக வளர்ந்துள்ளது. முன்னதாக இந்தி மொழியில் பரிச்சையமான திரைப்படங்கள் ஒடிடி தளங்களில் வந்திருந்தாலும் கொரோனாவிற்கு பின்பே அனைத்து மொழிகளிலும் வளர்ச்சி அடைய தொடங்கி விட்டது. குறிப்பாக அந்தந்த மொழிகளுக்கு தனி தனி கவனம் செலுத்தி படங்களையும் தொடர்களையும் பிரத்யேகமாக கொடுத்து வருகிறது. அதன்படி முன்னதாக தமிழில் பல முக்கிய திரைப்படங்கள் நேரடியாக ஒடிடி யில் வெளியானது. அதில் பல திரைப்படங்கள், தொடர்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜீ 5 ஒடிடி தளத்தில் வெளியான தொடர் ‘அயலி’ முத்துகுமார் இயக்கத்தில் அபி நக்ஷத்ரா,அனுமோல்,மதன், சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்து வெளியான அயலி தொடர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பல இடங்களில் பெற்று வருகிறது. குழந்தை திருமணம், சாதி வெறி , மூட நம்பிக்கைக்கு எதிராக பேசி கல்வி முக்கியத்துவத்தை குறிப்பாக பெண் குழந்தைகளின் பெண் கல்வி முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் 8 எபிசோடுகள் கொண்ட தொடராக வெளியானது. வெளியான நாளிலிருந்து இன்று வரை ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது அயலி தொடர் 100மில்லியன் பார்வையாளர்களை கடந்து தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. மேலும் பல முக்கிய பிரமுகர்கள் தொடரை பார்த்து விட்டு பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அயலி தொடர் இயக்குனர் முத்துக்குமாரை அழைத்து தொடர் குறித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும் பெண் அடிமை, மூட நம்பிக்கை, சாதி போன்றவைக்கு எதிராக கடும் போராட்டத்தை நடத்திய தந்தை பெரியார் சிலையை அவருக்கு அளித்து பாராட்டினார்.

மேலும் அவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றி உதயநிதி ஸ்டாலின் அதனுடன், “அயலி ZEE 5 தள வெப் சீரிஸ். வயதுக்கு வந்ததை மறைத்து, மருத்துவர் கனவோடு படிக்கும் மாணவியின் கதை. குழந்தை திருமணத்துக்கு எதிரான, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படம் அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று. இப்பட இயக்குநர் முத்துக்குமாருக்கு பெரியார் சிலை அளித்து பாராட்டினேன். என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது பதிவின் கீழ், "யார் என்ன சொன்னாலும் உன் அறிவுக்கு எது சரின்னு படுதோ அதை செய்" என்னும் பெரியார் சொல்லே அயலியின் அடிநாதம், அதற்கு அடையாளமாய் அவரின் சிலை தந்து பாராட்டிய திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி..” என்று தொடரின் தயாரிப்பு நிறுவனமும் பிரபல ஓடிடி நிறுவனமும் ஆன ஜீ5 தளம் பதிவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து உதயநிதியின் பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.