தமிழ் சினிமாவின் நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராகவும் சிறந்த நடிகராகவும் தொடர்ந்து தரமான திரைப்படங்களை வழங்கி வரும் நடிகர் சூர்யா தனது சூரரைப் போற்று திரைப்படத்திற்காக, சிறந்த நடிகராக தனது முதல் தேசிய விருதை பெற்றார். கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டில் சூர்யா கதாநாயகனாக நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானது. இதனை அடுத்து உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் எனும் மிரட்டலான கதாபாத்திரத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே தோன்றிய சூர்யா, அந்த ஒரே காட்சியில் தனது மிரட்டலான நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனுடன் வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா இணைய இருக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி தயாராகும் வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில் வெகுவிரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

முன்னதாக சிறுத்தை, வீரம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சிவா, கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த அண்ணாத்த படத்தை இயக்கினார். அண்ணாத்த படத்தை தொடர்ந்து தற்போது சூர்யாவின் திரைப்பயணத்தில் 42வது திரைப்படமாக தயாராகி வரும் கங்குவா படத்தை இயக்குனர் சிவா இயக்கி வருகிறார். நடிகர் சூர்யாவின் திரைப் பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய பொருட்ச் செலவில் மிக பிரமாண்டமான திரைப்படமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகும் கங்குவா திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் UV கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. சூர்யாவுடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கும் சூர்யா 42 திரைப்படத்தில் வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

அட்டகாசமான பீரியட் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் இந்த கங்குவா திரைப்படத்தை இந்தியாவில் 10 மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் கங்குவா திரைப்படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றும் சுப்ரீம் சுந்தர் படப்பிடிப்பு குறித்து அட்டகாசமான தகவலை பகிர்ந்து கொண்டார். கடந்த ஜனவரி மாதம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான அஜித்குமாரின் துணிவு திரைப்படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றிய சுப்ரீம் சுந்தர் மலையாளத்தில் வெளிவந்த குறிப்பிடப்படும் திரைப்படங்களான ஜல்லிக்கட்டு, டிரைவிங் லைசன்ஸ், ஐயப்பனும் கோஷியும், பீஷ்ம பர்வம் உள்ளிட்ட பல படங்களுக்கு பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் கங்குவார் திரைப்படத்தின் போஸ்டரை பதிவிட்டு, "இந்தியா திரும்பி இருக்கிறேன் என்னுடைய கனவு ப்ராஜெக்ட் படப்பிடிப்பிற்கு செல்கிறேன்... கங்குவா அதிரடி ஆக்சன் ஆரம்பம்" என குறிப்பிட்டுள்ளதால் நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெறுவதா தெரிகிறது. மேலும் இதர தகவல்கள் அடுத்தடுத்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டன்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் அவர்களின் அந்தப் பதிவு இதோ…