மக்களின் மனம் கவர்ந்த ஹீரோவாகவும் பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுக்கும் முன்னணி இயக்குனராகவும் திகழும் ராகுவால் லாரன்ஸ் அவர்கள், அடுத்ததாக சந்திரமுகி 2 திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடிக்க, வைகைப்புயல் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தை இயக்குனர் பி.வாசு இயக்குகிறார். கிட்டத்தட்ட சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் முக்கிய பகுதிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இறுதி கட்டமாக மூன்று பாடல்களும் ஒரு சண்டைக் காட்சி மட்டும் இன்னும் படமாக்க வேண்டி இருக்கிறது. எனவே மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விரைவில் வருகிற விநாயகர் சதுர்த்தி வெளியீடாக சந்திரமுகி 2 திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமாக தயாராகும் ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தில் SJ.சூர்யா அவர்களோடு இணைந்து ராகவா லாரன்ஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதனிடையே ராகவா லாரன்ஸ் நடிப்பில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாரான ருத்ரன் திரைப்படம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தயாரிப்பாளர் S.கதிர்வேசன் அவர்கள் முதல் முறை இயக்குனராக களமிறங்கி இருக்கும் ருத்ரன் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க சரத்குமார் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார்.

பக்கா ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக ருத்ரன் திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வு நமது கலாட்டா சேனலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ராகவா லாரன்ஸ் அவர்கள் பல சுவாரசியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் “பேய் படங்கள் என்றாலே பொதுவாக மக்கள் பயந்து பயந்து தான் பார்ப்பார்கள். ஆனால் உங்களது படங்களை சிரித்து சிரித்து ரசித்து பார்க்கிறார்களே இந்த எண்ணம் எப்படி தோன்றியது?” என கேட்டபோது, “மாஸ் என்ற ஒரு படம் இயக்கினேன் அது ஆக்சன், அடுத்து டான் என்ற ஒரு படம் இயக்கினேன். அதுவும் ஆக்சன், பின்னர் ஸ்டைல் என பிரபு தேவா மாஸ்டரோடு இணைந்து ஒரு படம் இயக்கினேன் அது டான்ஸ் படம், எனவே அடுத்து என்ன படம் செய்யலாம். ஒரே மாதிரி படங்கள் செய்ய வேண்டாம் என நினைத்தபோது, ஒரு பேய் படம் பண்ணலாமே என தோன்றியது. சரி என்று எல்லா பேய் படங்களையும் எடுத்து பார்க்கும்போது அது எல்லாமே சீரியஸாக இருந்ததே தவிர காமெடியாக இல்லை. பேய் படம் என்றாலே ஒரு பெண்ணை கற்பழித்து விடுவார்கள் அந்தப் பெண் பேயாக வந்து பழி வாங்குவார் இதுதான் கதையாக இருந்தது. அதில் காமெடி சொல்லலாம் என முயற்சி செய்து பார்த்தது தான் முனி படம், பின்னர் அதே பேய் படத்தில் காமெடி, பயம் அதோடு சேர்ந்து ஒரு சமூக கருத்தை சொல்ல சொல்ல முயற்சி செய்து திருநங்கை கதாபாத்திரத்தை வைத்து எடுத்த படம் தான் காஞ்சனா!” என பதிலளித்துள்ளார். இன்னும் பல சுவாரசியங்கள் பகிர்ந்து கொண்ட ராகவா லாரன்ஸின் அந்த முழு பேட்டி இதோ…