தமிழ் சினிமாவில் வித்யாசமான கேங்க்ஸ்டர் திரைப்படமாக கடந்த 2014 ம் ஆண்டில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. மதுரையை சுற்றி நிகழும் கொலை, கட்டபஞ்சாயத்து சார்ந்து டார்க் காமெடி திரைப்படமாக உருவாக்கப்பட்ட ஜிகர்தண்டா திரைப்படம் மக்கள் வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் அடித்தது. இப்படத்தில் சித்தார்த். பாபி சிம்ஹா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் இணைந்து லக்ஷ்மி மேனன், அம்பிகா, கருணாகரன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்ற ஜிகர்தண்டா திரைப்படத்திற்கு சிறந்த குணசித்திர நடிகருக்கான தேசிய விருதினை நடிகர் பாபி சிம்ஹா பெற்றார். இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஜிகர்தண்டாவின் இரண்டாம் பாகம் எட்டு ஆண்டுகளுக்கு பின் இயக்கவுள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அதிரடியான வீடியோவுடன் அறிவிப்பை முன்னதாக வெளியிட்டனர். 'ஜிகர்தண்டா டபுள் X' என்று பெயரிடப்பட்டுள்ள ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ், வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடிக்கவுள்ளார். ‘இரண்டாம் பாகமான ஜிகர்தண்டா டபுள் X ல் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஒளிப்பதிவாளர் திரு (எ) திருநாவுக்கரசு ISC ஒளிப்பதிவு செய்கிறார்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் முன்னோட்டமே மிகப்பெரிய வரவேற்பை பெற்று ரசிகர்களின் ஆவலை எகிற வைத்தது. இந்நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணனிடம் படம் குறித்து கேட்கையில்,

"கார்த்திக் சுப்புராஜ் எப்போது சொல்வார் ஒரு படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்றால் நம் மனசுக்கு நேர்மையாக இருக்கனும் னு.. ஏன்னா, ஒரு படத்தோட ஒன்லைன் எடுத்து இன்னொரு படம் பண்ணிடலாம் அதுவும் வரத்த நோக்கில் தான் இருக்கும். கார்த்திக் அதனாலே எப்போதும் சொல்வார் 'நாம் ஜிகர்தண்டா 2 படம் செய்தால் அதை சரியாக செய்ய வேண்டும்' என்று. அதன்பின் ஒருநாள் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தோட கதை கார்த்திக் சொன்னார்.‌எனக்கு அந்த கதை ரொம்ப பிடித்து போய்விட்டது. லாரன்ஸ் சார், எஸ் ஜே சூர்யா சாருக்கெல்லாம் தனி ஸ்டைல் இருக்கு. ஒரு தனி சிறப்பம்சம் இருக்கு.. கதை அவர்களுக்கேற்றார் போல் இருந்தது.‌ நிறைய இசைக்கான வேலை இருக்க கூடிய கதையாக இருந்தது. அதனால் அந்த படம் குறித்து நான் மிகுந்த ஆர்வமாக இருக்கின்றேன். " என்றார். "முதல் பாகத்தில் இருந்த இசை இந்த படத்திலும் தொடரும், அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய புதிய இசையும் இதில் இருக்கும். பழங்குடியினர் இசை போல் உதாரணமாக பிளாக் பாந்தர் படம் போல் இந்த படத்தின் இசை சாரம் இருக்கும்... நானும் அதைதான் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்” என்றார் சந்தோஷ் நாராயணன்

மேலும் பல சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்ட சந்தோஷ் நாராயணனின் முழு வீடியோ இதோ.