ஒட்டு மொத்த இந்தியாவின் எதிர்பார்ப்பின் மத்தியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘லியோ’. பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகும் லியோ படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் - திரிஷா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர்கள் கௌதம் மேனன் மற்றும் மிஸ்கின் மற்றும் பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

தளபதி விஜய் திரைப்படம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்று எதிர்பார்ப்பிற்கு பஞ்சமில்லாமல் தயாராகி வரும் லியோ படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு LCU வில் லியோ திரைப்படம் இடம் பெறுமா என்பதே.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த விக்ரம் திரைப்படத்தில் அவருடைய முந்தைய திரைப்படமான கைதி திரைப்படத்தை இணைத்து விக்ரம் திரைக்கதையை தொடர்ந்திருப்பார். பின் இறுதி காட்சியில் நடிகர் சூர்யாவை கவுர தோற்றத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து மிரட்டியிருப்பார். மேலும் இந்த படத்தின் மூலம் உலகநாயகன் கமல் ஹாசன், சூர்யா, கார்த்தி, பகத் பாசில், விஜய் சேதுபதி, ஹரிஷ் உத்தமன், அர்ஜுன் தாஸ், நரேன் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஏற்கனவே இணைந்துள்ளனர். இந்த திரையுலகத்திற்கு லோகேஷ் ரசிகர்கள் Lokesh Cinematic Universe (LCU) என்று பெயரிட்டனர். பின் இதனை அதிகாரபூர்வமாக கட்டமைத்து LCU பிரிவில் திரைப்படங்கள் இயக்கவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார்.

அதன்படி தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படம் LCU வில் இடம் பெறுமா என்பதை இதுவரை உறுதி படுத்தவில்லை. இருந்தும் ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பல அனுமானங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதன்படி ரசிகர் ஒருவர் கைதி, விக்ரம் ஆகிய படங்களில் ‘அடைக்கலம்’ என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ஹரிஷ் உத்தமன் கதாபாத்திரத்துடன் தளபதி விஜய் அவர்களின் புகைப்படத்தை சேர்த்து “லியோ நீ ஆபத்தில் இருக்கிறாய்.” என்று அடைக்கலம் சொல்வது போலவும் அதற்கு லியோ “நான் ஆபத்தில் இல்லை.. ஆபத்தே நான்தான்” என்று ‘பிரேக்கிங் பேட்’ தொடரின் மாஸ் பஞ்ச் பேசுவது போலவும் ரசிகர் ஒருவர் தயார் செய்து பதிவு செய்துள்ளார். இதனை ஹரிஷ் உத்தமன் அதனுடன் “இப்படி இருந்தால் நல்லாருக்கும் ..” என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் LCU வினை ஹரிஷ் உத்தமன் இவ்வாறு உறுதி செய்துள்ளார் என்று பல கருத்துகளுடன் பகிர்ந்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை பண்டிகையையொட்டி பான் இந்திய அளவிற்கு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.