கே ஜி எப் களத்தில் பிரிட்டிஷ் ஆட்சி காலக்கட்ட கதையம்சத்தில் அட்டகாசமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’. பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சியான் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் நீலம் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை பா ரஞ்சித் உடன் இணைந்து எழுதியுள்ளார் எழுத்தாளர் தமிழ் பிரபா. ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். நாளுக்கு நாள் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டு இருக்கும் நிலையில் தங்கலான் படக்குழுவினர் தினமும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டுகின்றனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 17 ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தனுஷ் நடிப்பில் உருவான வாத்தி திரைப்படம் குறித்தும் அப்படத்தின் படமாக்கம் மற்றும் பாடல் உருவாக்கம் குறித்தும் இயக்குனர் வெங்கி அட்லூரி மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் ஆகியோர் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பகிர்ந்து கொண்டனர். இதில்

தங்கலான் படத்தில் பணியாற்றி வரும் ஜிவி பிரகாஷ் குமாரிடம் தங்கலான் திரைப்படத்தின் பாடல் உருவாக்கம் குறித்து கேட்கையில் அவர், “தங்கலான் படத்தில் 3 பாடல்கள் முடிந்துள்ளது. அது மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. காலம் கடந்த திரைப்படங்களின் பிரிவில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ இந்தியன் கிளாசிக். ‘வாத்தி’ திரைப்படம் ஒரு வகையான பிரிவு படம். ஆனால் இங்கே ‘தங்கலான்’ பிரிட்டிஷ் காலத்தில் உருவாகிறது. அதில் பழங்குடினர் மற்றும் மேல்நாட்டு பிரிவில் இசையில் படம் செல்லும்.

பா ரஞ்சித் அவருக்குண்டான பாடலாசிரியருடன் பயணித்து வித்யாசமான நிறைய வரிகளுடன் வருவார். பின் நான் அதற்கேற்ப இசை அமைப்பேன். பாடல் வரிகள் ரொம்பவே அருமையாக இருந்தது. எல்லாமே தனித்துவமான வரிகள். ஒரு பாடலுக்கு அவர் எனக்கு இரண்டு நாள் தான் நேரம் கொடுத்தார். பின் எப்படியோ அவர் என்னை சமாளித்து இரண்டு நாளில் முடித்து வாங்கினார். அந்த பாடலும் ரொம்பவே நல்லா வந்திருக்கு.. பழங்குடியினர் சார்ந்து அவர் வேலை பார்த்து பாடலுக்கு தேவையான வரிகளை நேர்த்தியாக சேகரித்து கொடுப்பார்.” என்றார் ஜிவி பிரகாஷ் குமார்.

மேலும் வாத்தி திரைப்படத்தின் பல சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட வீடியோ இதோ..