தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனராகவும் ஒளிப்பதிவாளராகவும் இருப்பவர் ராஜீவ் மேனன். தமிழில் மணிரத்தினம் அவர்களின் பாம்பே திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான ராஜீவ் மேனன் பின் அடுத்த இரண்டே ஆண்டுகளில் தமிழில் அட்டகாசமான படத்தை இயக்கி வெளியிட்டார். 1997 ல் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான மின்சார கனவு திரைப்படம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்து கவனிக்கத்தக்க இயக்குனராக உருவானார் ராஜீவ் மேனன் அதன்பின் 2000 த்தில் நடிகர்கள் மம்மூட்டி, அஜித் குமார், ஐஸ்வர்யா ராய், தபூ, அப்பாஸ் என்று Multi star Project ஆன ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தை கொடுத்து மெகா ஹிட் கொடுத்தார். பின் மீண்டும் மணி ரத்னம் அவர்களின் குரு படத்தில் ஒளிப்பதிவாளராக மீண்டும் பேசப்பட்டார் ராஜீவ் மேனன். பின் மீண்டும் மணிரத்னம் படமான ‘கடல்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். நீண்ட நாள் கழித்து ஜி வி பிரகாஷ் குமார் அவர்களை வைத்து ‘சர்வம் தாளமயம்’ திரைப்படத்தை கொடுத்தார். படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் நல்ல வரவேற்பையே பெற்றது. பின் திரைத்துறையில் இருந்து விலகி இருந்த ராஜீவ் மேனன் மீண்டும் வேறு பரிமாணத்தில் நடிகராய் அறிமுகமான படம் தான் வெற்றிமாறனின் விடுதலை.

பீரியட் கிரைம் திரில்லர் கதைகளத்தில் இரண்டு பாகங்களாக உருவான விடுதலை பாகத்தில் ராஜீவ் மேனன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் நடிகருமான ராஜீவ் மேனன் நமது கலாட்டா தமிழ் பேட்டியில் கலந்து கொண்டு விடுதலை திரைப்படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் விடுதலை முதல் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்தது குறித்து ராஜீவ் மேனன் பகிர்ந்து கொண்டவை,

"படத்துல அவர் வர நேரம் பாத்தீங்கனா 8 நிமிஷம் போல தான் இருக்கும். ஆனால் அதனுடைய தாக்கம் படத்துல மிகப்பெரியது. மக்கள் செல்வனு அவருக்கு சும்மா ஒன்னும் பெயர் வைக்கவில்லை.. உண்மையிலே அவர் தலைசிறந்த தமிழ் சினிமா நடிகர்களில் முக்கியமானவர். சிலர் ஆரம்பத்தில் நடிக்க வருவார்கள் ஆனால் விரைவிலே அவர்கள் மாறிவிடுவார்கள். தொடர்ந்து அதையே செய்து வருவார்கள். ஆனால் சேதுபதி இப்போது.. யாரும் செய்ய முடியாத விஷயத்தை செய்து வருகிறார். இந்தியில் நடிக்கிறார், தெலுங்கு நடிக்கிறார். ஆம்பளையாகவும் பொம்பளையாகவும் நடிக்கிறார். அதே நேரத்தில் வில்லனா நடிக்கிறார்.. அந்த flexibility யாருக்கும் இன்னும் வரல..

ஒருவேளை மற்ற மொழிகளில் நாசர் அதை செய்திருந்தார். கமல் ஹாசன் இளமை காலத்தில் அதை செய்தார். ஆனால் இந்த ஆட்டத்தில் விஜய் சேதுபதி வேறு தளத்திற்கு சென்று விட்டார். ஆனால் சின்ன கதாபாத்திரம் இதில் இருந்தது. இரண்டாம் பாகத்தில் ரொம்ப ரொம்ப மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆரம்பத்தில் பாரதிராஜா சார் 5 நாளில் நடிக்க வேண்டியிருந்தது.‌ ஆனால் படப்பிடிப்பு தளம் கொடுமையா இருந்தது. அதனால் தவிர்க்கப்பட்டது. அவருக்கு மாற்றாக விஜய் சேதுபலி கொண்டு வந்து அவர் அதை சிறப்பாக செய்துள்ளார்." என்றார்.

மேலும் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் வெற்றிமாறனின் விடுதலை படம் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..