தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக அனைத்து தரப்பு வயதினரும் ரசிக்கும் படியான பல குடும்ப திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்த இயக்குனரும், நகைச்சுவை நடிகருமான T.P.கஜேந்திரன் அவர்கள் காலமானார். அவருக்கு வயது 68.

வீடு மனைவி மக்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டு தங்கம், எங்க ஊரு மாப்பிள்ளை, நல்ல காலம் பொறந்தாச்சு, பெண்கள் வீட்டின் கண்கள், பாட்டு வாத்தியார், பாசமுள்ள பாண்டியரே, பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவம் உள்ளிட்ட படங்களை இயக்கிய TP.கஜேந்திரன் அவர்கள் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மகனே என் மருமகனே.

இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் முக்கிய வேடங்களிலும் TP.கஜேந்திரன் நடித்துள்ளார். அந்த வகையில் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளிவந்த பன்னிக்குட்டி திரைப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் TP.கஜேந்திரன் அவர்கள் நடித்திருந்தார்.

இயக்குனர் TP.கஜேந்திரன் அவர்கள், தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் கல்லூரி நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக உடல்நல குறைவு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக அவதிப்பட்டு வந்த இயக்குனர் TP.கஜேந்திரன் அவர்களை கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்நிலையில் இன்று பிப்ரவரி 5ஆம் தேதி அதிகாலை இயக்குனரும் நடிகருமான TP.கஜேந்திரன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் TP.கஜேந்திரன் அவர்களின் மறைவுக்கு தமிழ் திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.