உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இல்லை என மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், விஜயகாந்த் அவர்களின் உடல் நலமாக இருப்பதாகவும் அவர் சிகிச்சைகளுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார் என்றும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், தற்போது உடல்நிலை சீராக இல்லை என இன்று நவம்பர் 29ஆம் தேதி மீண்டும் மருத்துவமனை நிர்வாகம் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

நுரையீரல் தொடர்பான பிரச்சனை காரணமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கடந்த 24 மணி நேரமாக கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை சீராக இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி இன்னும் அதிகம் தேவைப்படுவதாகவும் அடுத்த 14 நாட்களுக்கு தொடர்ந்து மருத்துவமனையில் அவர் சிகிச்சை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு மருத்துவமனை நிர்வாகம் புதிய அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,

"திரு. விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது."

என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவமனை வெளியிட்ட விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை இதோ...

கடந்த நவம்பர் 18ஆம் தேதி சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை கடந்த சில தினங்களாக சீராக இருந்த நிலையில் தற்போது நுரையீரல் பிரச்சனை காரணமாக சீராக இல்லை என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருக்கிறது. முன்னதாக கடந்த 18ஆம் தேதி மருத்துவமனையில் விஜயகாந்த் அவர்கள் அனுமதிக்கப்பட்ட சமயத்தில் இருந்தே அவரது உடல்நிலை குறித்து தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான செய்திகள் பரவி வந்த நிலையில், விஜயகாந்த் அவர்களின் தரப்பில் இருந்து போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வரும் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில்,

“திரு.விஜயகாந்த் அவர்கள் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் 18 நவம்பர் 2023 அன்று அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். அவர் உடல் நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகள் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்பி தனது வழக்கமான நடவடிக்கைகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டது. எனவே விரைவாக பூரண குணமடைந்து கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்றும் அவரது தொண்டர்களும் ரசிகர்களும் ஆவலோடு காத்திருந்த நிலையில், தற்போது மீண்டும் உடல்நிலை சீராக இல்லை என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருப்பதால் மீண்டும் தொண்டர்களும் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வெகு விரைவில் பூரண குணமடைந்து மீண்டு வர வேண்டும் என கலாட்டா குழுமம் வேண்டிக் கொள்கிறது.