உக்ரைன் ​மீதான ரஷ்யாவின் போர் 2-வது நாளாக தொடர்வதால் தொடர்ந்து குண்டுவெடிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததாகவும், பொதுமக்களை உஷார்படுத்த சைரன்கள் ஒலித்துக்கொண்டே இருந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்தது. உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் இல்லை என கூறிய ரஷியா, பெலாரஸ் நாட்டு ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்காகவே படைகளை குவித்து வருகிறோம் என தெரிவித்தது. அதே வேளையில் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் பிரிவினைவாதிகளை தூண்டிவிட்டு, அவர்கள் மூலம் உக்ரைனுக்குள் ஊடுருவதற்கான வேலைகளை ரஷியா செய்தது.

உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லை பகுதிகளில் ரஷிய கூட்டமைப்பு ஏவுகணைகளை பொழிந்து வருகின்றன. இதனால், லுஹான்ஸ்க், சுமி, கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் ஜைட்டோமைர் பகுதிகளில் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்த தாக்குதல்கள் எல்லை பிரிவுகள், எல்லையில் ரோந்து பகுதிகள் மற்றும் சோதனை சாவடி பகுதிகளில் நடத்தப்படுகின்றன. இதற்காக ரஷியா, சிறிய வகை பீரங்கிகள், கனரக மற்றும் சிறிய ஆயுதங்களை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. ரஷியாவின் கிரீமியா சுயாட்சி பகுதியில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படுகிறது என உக்ரைன் தெரிவித்து உள்ளது.

உக்ரைனில் உள்ள ராணுவ தளங்கள், விமான தளங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் மீதான போரை ரஷிய நிறுத்த உலக நாடுகள் உதவ வேண்டும் என உக்ரைன் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ரஷியாவுக்கு ஜெர்மனி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது நேற்று ரஷியா போர் தொடுத்தது. சரமாரி குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல் காரணமாக உக்ரைன் நிலைகுலைந்து போய் உள்ளது. உலகத்தின் ஒட்டுமொத்த பார்வையும், ஒரே நாளில் உக்ரைன் நாட்டின் மீது திரும்பி இருக்கிறது. நேற்றைய தாக்குதல்களில் உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 68 பேர் பலியானதாக உக்ரைன் அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ஒன்று கூறியது. ஆனால் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷிய தரப்பில் சேதமே இல்லையா என்ற கேள்விக்கு பதில் இருக்கிறது. ரஷியாவின் 2 ஹெலிகாப்டர்களை உக்ரைன் படையினர் வீழ்த்தினர். 2 ரஷிய துருப்புகளை உக்ரைன் ராணுவம் சிறைப்பிடித்தும் இருக்கிறது. முதல் நாள் சண்டையில் 137 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் அதிபர் விளோதிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளதாக ஏஎப்பி செய்தி வெளியிட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து உக்ரைன் ​மீதான ரஷ்யாவின் போர் 2-வது நாளாக தொடர்கிறது. ரஷ்ய படைகளிடம் இருந்து செமி நகரை மீட்க உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் தொடர்வதால், பீதியில் உறைந்துள்ள மக்கள் மெட்ரோ ரெயில்நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். ரஷியாவுக்கு எதிராக தன்னந்தனியாக போராடி வருகிறோம் என உக்ரைன் அதிபர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். மேலும் 18 - 6- வயது ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது. கீவ் நகரில் உள்ள மக்களுக்கு 10,000 தானியங்க துப்பாக்கிகள் விநியோகித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.