பெண்களுடன் நெருங்கிப் பழக ஏற்பாடு செய்வதாகக் கூறி பண மோசடி செய்த ஒருவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

ஆசை, நிலையற்றது என்பதற்கு உதாரணம் சபலம்! சபலம், அது வரையறைக்கு உட்படுத்த முடியாத ஒரு வித உணர்வின் ஆசை. இந்த உலகத்தில் சபலத்திற்கு ஆளாகாமல் ஒரு மனிதரும் இருந்திருக்க முடியாது என்ற ஒரு சொல்லாடல் உண்டு.

அப்படிப்பட்ட சபலத்தை நம்பி, ஒரு கும்பல் இங்கே இளம் வயது இளைஞர்களிடம் வியாபாரம் செய்ய பார்க்கிறது. பாலியல், ஆன்லைனிலும் விற்கத் தொடங்கியாச்சு. இதை, வளர்ச்சியில் ஒலிந்துள்ள வீழ்ச்சி என்று சொல்லலாமா?

locanto என்கிற ஆன்லைன் டேட்டிங் ‘ஆப்பு’ மூலம், திருநெல்வேலி மாவட்டம் பணகுடியை சேர்ந்த ரீகன் என்பவர், செக்ஸ்வல் ரீதியான பல மோசடிகளை இளைஞர்களிடம் அரங்கேற்றி வந்துள்ளார்.

இந்த ஆன்லைன் டேட்டிங் ஆப்பில், சில அழகான பெண்களின் புகைப்படத்தைப் பதிவிட்டு, அவர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்றால், அவர்களுடன் உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என்றால், முன் பணம் செலுத்த வேண்டும் என்று விளம்பரம் செய்திருந்தார்.

அதைப் பார்த்த சிலர், லட்சக் கணக்கில் Google pay மூலம் பணம் செலுத்தி ஏமார்ந்துள்ளனர். ஆனால், பணம் செலுத்தியதும், எந்த பெண்ணும் இவர்களைத் தொடர்புகொள்ள வில்லை.

இதனையடுத்து, குறிப்பிட்ட நம்பருக்கு போன் செய்து விளக்கம் கேட்டபோது, போலீசில் புகார் அளித்துவிடுவதாக, பணம் செலுத்தியவர்களை மிரட்டி உள்ளார். இவரின் மிரட்டலுக்குப் பயந்து போன பலர், பணம் போனால் போகட்டும், என்று அப்படியே விட்டுவிட்டனர்.

அதில், பாதிக்கப்பட்ட சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மயிலாப்பூர் போலீசாரிடம் இந்த ஆன்லைன் டேட்டிங் மோசடி குறித்து புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், உடனடியாக தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இந்த மோசடியில் திருநெல்வேலி மாவட்டம் பணகுடியை சேர்ந்த ரீகன், ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, தனிப்படை போலீசார் திருநெல்வேலிக்கு சென்று ரீகனை, அதிரடியாகக் கைது செய்து செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் ரீகனுடன் தொடர்பிலிருந்த மற்ற ஆன்லைன் மோசடி கும்பல் குறித்தும், போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.