கோவை, புதுக்கோட்டை, நாமக்கல் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், மாடுபிடி வீரர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
 
கோவை செட்டிப்பாளையத்தில் 3 வது ஆண்டாகத் தொடர்ந்து நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். இந்த விழாவில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், ஈஷா யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோர் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். 

Jallikattu at Coimbatore Pudukottai and Namakkal
 
அதன்படி, வாடிவாசல் வழியாகத் திறந்து விடப்பட்ட காளைகளை, அப்பகுதியைச் சேர்ந்த காளையர்கள் மடக்கிப் பிடித்தனர்.

காளைகளுக்கும் - காளையர்களுக்கும் இடையேயான மல்லுக்கட்டு களைக்கட்டியதால், அப்பகுதி மக்கள் உற்சாகமுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

Jallikattu at Coimbatore Pudukottai and Namakkal

அத்துடன், ஜல்லிக்கட்டில் வெற்றிபெறும் மாடுகளின் உரிமையாளர்களுக்கும், மாடு பிடிகாரர்களும் தங்க நாணயங்கள், கார், இருசக்கர வாகனங்கள், பீரோ உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டு வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் கவிநாடு கிராமத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டியை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.

Jallikattu at Coimbatore Pudukottai and Namakkal

இந்த ஜல்லிக்கட்டில் 850 காளைகளும், 450 காளையர்களும் உற்சாகமுடன் கலந்துகொண்டனர். களத்தில் சீறிப் பாய்ந்த காளையர்கள் மடக்கிப் பிடித்த காட்சிகள் ஒவ்வொன்றும் மிக அற்புதம். இந்த ஜல்லிக்கட்டு போட்டி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால், பொதுமக்கள் உற்சாகத்துடன் காணப்பட்டனர். மாடுகளின் உரிமையாளர்களுக்கும், மாடு பிடிவீரர்களும் பல்வேறு பரிசுப் பொருட்களைப் பெற்று அசத்தினர்.

அதேபோல், நாமக்கல் மாவட்டம் போடி நாயக்கன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை, அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா மற்றும் ஆட்சியர் மெகராஜ் ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து தொடங்கிவைத்தனர்.

Jallikattu at Coimbatore Pudukottai and Namakkal

இந்த ஜல்லிக்கட்டில் 450 காளைகளும், 300 க்கும் மேற்பட்ட காளையர்களும் கலந்துகொண்டனர். வாடிவாசல் வழியாகத் திறந்து விடப்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்து வந்தன. 

சில காளைகள் களத்தில் நின்று விளையாடியது. அந்த காளைகளிடம் எந்த வீரர்களும் கிட்டக்கூட நெருங்க முடியவில்லை. அதே நேரத்தில் பல காளைகளை, காளையர்கள் மடக்கிப் பிடித்தது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மிகுந்த உற்சாகத்துடனும், விறுவிறுப்புடனும் நடைபெற்ற  இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.