இந்தியாவில் நவம்பர் மாதம் நடைபெற இருந்த U-17 மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கால்பந்து போட்டிகள் அதிகம் புகழ் பெற்றுத் திகழ்ந்தாலும், இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே புகழ் பெற்றுத் திகழ்கிறது.

இதனால், மற்ற உலக நாடுகளைப் போல், இந்தியாவிலும் கால்பந்து போட்டிகளை நடத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாகக் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

அதன்படி, கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து கால்பந்து அணிகள் வெளிநாடுகளில் சென்று விளையாடி வந்த நிலையில், இந்தியாவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம், U-17 மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, வரும் நவம்பர் 2 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை, இந்தியாவில் கொல்கத்தா, கவுகாத்தில், புவனேஷ்வர், அகமதாபாத், நவி மும்பை ஆகிய 5 முக்கிய நகரங்களில் கால்பந்து போட்டி நடக்க முடிவு செய்யப்பட்டது.

இதில், 16 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்க இருந்தன. இந்தியா முதன் முதலில் இந்த போட்டியை நடத்துவதால், தானாகவே தகுதி பெற்றது. மேலும், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டியில், இந்தியா முதன் முதலில் பங்கேற்க இருந்தது.



ஆனால், உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ், அதன் வீரியத்தை இந்தியாவிலும் காட்டி உள்ளதால், இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் நடைபெற இருந்த மகளிர் உலக கோப்பை போட்டி தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பிபா தற்போது அறிவித்துள்ளது. அத்துடன், போட்டிகள் நடைபெறும் புதிய தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா கூறியுள்ளது.