தமிழகத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி தற்போது பார்க்கலாம்...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பாதித்தவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுக்காக, அதிகளவில் முழு உடல் பாதுகாப்பு ஆடை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பான பணிகளும் தற்போது முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

 Actions taken against Corona virun in TN

வீடுகளுக்கு டோக்கன் வழங்கும்போதே கொரோனா நிவாரண நிதியாக ரூ.1,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தற்போது அறிவித்துள்ளார். வெளியூரில் இருப்பவர்கள் ஒரு மாதத்திற்குள் சென்று நிவாரண உதவியை பெற்றுக்கொள்ளலாம் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

பிற மாநிலங்களிலிருந்து வந்து பணியாற்றும் 1.34 லட்சம் பணியாளர்கள் தமிழகத்தில் உள்ள நிலையில், வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 Actions taken against Corona virun in TN

அரசு அங்கீகரித்த செய்தியாளர்களுக்கு தலா ரூ.3,000 நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதேபோல், 144 தடை உத்தரவு மக்களை துன்புறுத்துவதற்காக அல்ல, இது அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்கானது, இதை மனதில் வைத்து மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக 6 கொரோனா பரிசோதனை மையங்கள் விரைவில் செயல்பட உள்ளன.

குறிப்பாக, தமிழகத்தில் சில சிகிச்சைகளை அளிக்கத் தனியார் மருத்துவமனைகள் மறுப்பதாகப் புகார் எழுந்த நிலையில்; கர்ப்பிணிகள், குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்காவிடில் தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவி வருவது தொடர்பாக, சிலர் மதம் ரீதியாக விமர்சனம் செய்து வருகின்றனர். இது தொடர்பாகச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “சாதி, மதத்தின் பெயரில் கொரோனா வதந்தி பரப்பினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையிலான பணிக்குழு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பல்வேறு துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் பங்கேற்று வருகின்றனர். 

அதேபோல், அனைத்து மதத் தலைவர்களுடன் இன்று பிற்பகல் 3 மணிக்குத் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். 

தமிழகத்தில் ஊரடங்கை மீறி, சாலைகளில் வாகனங்களில் சுற்றிய 54,817 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவற்றில், 40,903 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 17,02,44 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.