உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டிய நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

உலகையே ஆட்டி படைத்து வருகிறது கொரோனா என்னும் கொடிய நோய். கொரோனா வைரஸ் தோன்றி பரவியபோது, இதன் பாதிப்பை உலக நாடுகள் உணர வில்லை. ஆனால், எதிர்பார்க்காத வகையில், அதன் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் உயர்ந்துகொண்டே செல்கிறது.

10 lakh affected 53 thousand dead due to Corona

சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா என்னும் கொடிய வைரஸ், தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டு ஆட்டி படைக்கிறது.

ஸ்பெயினில் நேற்று ஒரு நாளில் கொரோனாவினால் 1000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்பெயின் நாட்டில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதுவரை பலியான நிலையில், அங்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

அமெரிக்காவில் மட்டும் 2.44 லட்சத்துக்கும் அதிகமானோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 884 பேர் அந்நாட்டில் உயிரிழந்துள்ளனர். இதனால், அமெரிக்காவில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,070 ஆக அதிகரித்துள்ளது.

10 lakh affected 53 thousand dead due to Corona

இத்தாலியில் மட்டும் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அங்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 115,242 ஆக உயர்ந்துள்ளது. 

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் நேற்று 563 பேர் கொரோனாவால் பலியானார்கள். 

இதன் மூலம், உலக அளவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 10 லட்சத்தைக் கடந்துள்ளது. அதேபோல், உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 53,167 பேரை கொரோனா வைரஸ் கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கொரோனா பரவல் காரணமாக, சிங்கப்பூரில் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல், ஒரு மாத காலத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.