கொரோனா வைரசை விட, இந்தியா மிகப் பெரிய மோசமான ஆபத்தைச் சந்திக்க இருப்பதாக ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

“காப்பான்” படத்தில் வரும் வெட்டுக்கிளிகள் காட்சிகளை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. நிழல், இப்போது நிஜமாகப் போகிறது என்பதுதான் தற்போது பீதியாக இருக்கிறது.

தற்போது, இந்தியா மட்டுமல்ல உலகமே கொரோனா என்னும் கொடிய நோயால் மிக கடுமையான பாதிப்பதைச் சந்தித்து வருகின்றன. இதனால், இந்தியா பொருளாதாரம் மிகப் பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளது.

ஒரு பக்கம் கொரோனா, இன்னொரு பக்கம் சுட்டெரிக்கும் வெயில் என்று இந்தியாவே சிக்கித் தவித்துக்கொண்டு இருக்கும் நிலையில், 3 வது மிகப் பெரிய ஆபத்து ஒன்று இந்தியாவுக்கு வர உள்ளது.



அதாவது இன்னும் 2 மாதங்களில், இந்தியாவில் உள்ள விளை நிலங்களை மிகப்பெரிய அளவிலான வெட்டுக்கிளிகள் கூட்டம், தாக்கக் கூடும் என ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளை வெட்டுக்கிளிகள் கூட்டம், “காப்பான்” படத்தில் வரும் காட்சியைப்போன்று, அங்குள்ள விவசாய பயிர்களைக் கடித்து நாசம் செய்தன.

அதனைத்தொடர்ந்து, ஆப்ரிக்காவிலிருந்து கிளம்பும் வெட்டுக்கிளிகள், பாலைவன வெட்டுக்கிளிகளுடன் இணைந்து ஏமன், ஈரான், சவுதி அரேபியா,பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள விளை நிலங்களில், இந்த வெட்டுக்கிளிகள் கூட்டம் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், ஐ.நா. சுட்டிக்காட்டி உள்ளது.

இந்தியாவை வெட்டுக்கிளிகள் தாக்கினால், இந்தியாவின் வேளாண்மை கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும், இதனால் உணவு உற்பத்தியில் இந்தியா மிகப்பெரிய பாதிப்பைச் சந்திக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஒரு சதுரகிலோ மீட்டர் பரப்பளவில், சுமார் 4 கோடி வெட்டுக்கிளிகள் இருக்கும் என்றும், தினமும் 35 ஆயிரம் பேருக்கான உணவு தானியங்களை வெட்டுக்கிளிகள் அழித்துவிடும் என்றும், ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், கொரோனா பாதிப்பிலிருந்து இந்தியா மீண்டாலும், வெட்டுக்கிளிகளின் தாக்குதலையும் இந்தியா சமாளிக்க வேண்டி உள்ளதால், விவசாயிகள் அனைவரும் கலக்கமடைந்துள்ளனர்.

இதுபோன்ற இயற்கை பேரழிவுகளால், ஏழை இன்னும் ஏழையாகிறான் என்பது மட்டும் நிரூபணம் ஆகிக்கொண்டே இருக்கிறது.