ஹைட்ராக்சி க்ளோரோகுயின் மருந்தை அனுப்பி வைக்க அமெரிக்கா எச்சரித்த நிலையில், அந்த மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக மற்ற உலக நாடுகளைக் காட்டிலும், உலக வல்லரசு நாடான அமெரிக்கா அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மட்டும் 3 லட்சத்து 67,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மட்டும் அங்கு 1200 பேர் கொரோனா பாதிப்பால் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால், அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

இதனிடையே, அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிபர் டிரம்ப் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் ட்ரம்ப், “ 'ஹைட்ராக்சி க்ளோரோகுயின்' மருந்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து, கடந்த 5 ஆம் தேதி இந்திய பிரதமர் மோடியிடம் பேசியதாக” கூறினார்.

மேலும், “ மருந்து ஏற்றுமதியை இந்தியா அனுமதித்தால் மகிழ்ச்சி என்றும், மருந்து ஏற்றுமதியை இந்தியா அனுமதிக்காவிட்டாலும் பரவாயில்லை” என்றும் கூறிய அவர், சட்டென்று “இந்தியா 'ஹைட்ராக்சி க்ளோரோகுயின்' மருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யாவிட்டால், அதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படலாம்” என்றும் கூறினார்.

அத்துடன், “மருந்து அனுப்பாவிட்டால், ஏன் பதிலடி கொடுக்கக் கூடாது?” என்றும் அவர் கேள்வி எழுப்பி, இந்தியாவை எச்சரிக்கும் தொனியில் டிரம்ப் பேசினார்.

இதனையடுத்து, இந்தியாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கும் தொனியில் பேசுவதாக உலகில் உள்ள அனைத்து ஊடகங்களும் விமர்சனம் செய்தன. இது தொடர்பான விவாதங்களும் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், மனிதாபிமான அடிப்படையில் 'ஹைட்ராக்சி க்ளோரோகுயின்' மற்றும் 'பராசிட்டமல்' மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், “நம் நாட்டை நம்பி உதவி கேட்பவர்களுக்கு நாம் உதவ வேண்டும் என்றும், கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இந்த மருந்து ஏற்றுமதி செய்யப்படலாம்” என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

அத்துடன், “தேவையற்ற விவாதங்களுக்கும், அரசியலுக்கும் இடம் தர வேண்டாம்” என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதனிடையே, மனிதாபிமான அடிப்படையில் 'ஹைட்ராக்சி க்ளோரோகுயின்' மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியதாகக் கூறப்பட்டாலும்; இந்தியா, அமெரிக்காவிடம், அடிபணிந்துவிட்டதா என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.