அதிகரித்து வரும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் விதமாக, சென்னையில் மட்டும் முழு ஊரடங்குக்குத் தமிழக அரசு தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாளை மறுநாள் 4 வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, மாவட்டத்தில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று குறித்தும் கேட்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் பழனிசாமி, மருத்துவக்குழு நிபுணர்களுடன் ஆலோசனையின் படியே, தமிழக அரசு கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கலாமா? நீட்டித்தால் என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம்? என்பது குறித்து முடிவெடுக்க மருத்துவக்குழு நிபுணர்களுடன் நாளை மீண்டும் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்த ஆலோசனையில் துணை முதலமைச்சர் மற்றும் பல்வேறு துறைகளின் அமைச்சர்களும் பங்கேற்கிறார்கள். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படுகின்றன.

மேலும், தமிழகத்தில் ஊரடங்கு முடிய இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில், நாளை இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதால், இந்த கூட்டம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அத்துடன், இந்த கூட்டத்தில் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாகவும், மருத்துவச் சிகிச்சை, நெறிமுறைகள் குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பின் ஊரடங்கு குறித்து முழு தகவல் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக, கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த சென்னையில் மட்டும் முழு ஊரடங்குக்கு தமிழக அரசு தயாராகி வருவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனைத்தொடர்ந்து, கடைகளில் தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை, கிருமிநாசினி தெளிக்கவில்லை உள்ளிட்ட காரணங்களால், சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை மூட சென்னை மாநகராட்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால், அனைத்து கடைகளும் தற்போது மூடப்பட்டு வருகின்றன.

இதனிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 31 ஆம் தேதி தி.மு.க. தோழமை கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், கொரோனா தடுப்பில் மத்திய - மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்தும், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டை மறுக்கும் விவகாரம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.