“ஓ.பி.எஸ். மாடு பிடித்தாரா? ஜல்லிக்கட்டு நாயகன் ஆனது எப்படி?” என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியதால், தமிழக சட்டப்பேரவையில் சிரிப்பலையோடு ருசிகர விவாதமும் நடைபெற்றது.

2020-2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த 14 ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

இதனையடுத்து, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், நேற்று முதல் மீண்டும் தொடங்கிய நிலையில், பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று காலை தமிழக சட்டப்பேரவை தொடங்கியதும், திமுக பொருளாளர் துரைமுருகன் எழுந்து, “ஓ.பி.எஸ்.சை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்கிறார்கள். அவர் எப்போது மாடு பிடித்தார்? அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அவர் மாடு பிடித்தால், நேரில் வந்து பார்க்க ஆவலாக இருக்கிறோம்” என்று கூறினார்.

இதனால், சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது. சிரிப்பலை அடங்குவதற்குள் எழுந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றபோது, ஜல்லிக்கட்டு நடத்துவதாகச் சட்டம் நிறைவேற்றி தந்ததால், ஓ.பி.எஸ்.சை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்கிறார்கள்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் விரும்பினால், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைக்கு அழைத்துச் செல்கிறோம். துரைமுருகன் பார்வையாளராக வந்தாலும் சரி, மாடுபிடி வீரராக வந்தாலும் சரி, மகிழ்ச்சியே!” என்று பதில் அளித்தார்.

இதனால், சட்டசபையில் மீண்டும் சிரிப்பலை எழுந்தது.

இதனிடையே, தமிழக சட்டப்பேரவையில் துரைமுருகன் - விஜயபாஸ்கர் இடையே நடந்த ருசிகர விவாதம் தற்போது வைரலாகி வருகிறது.