திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம் விழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் பிரத்தியேகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த 28 ஆம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் விழா, இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை 1 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு சாயரட்சை தீபாராதனை காட்டப்பட்டன. அதனைத்தொடர்ந்து, பலவேறு சிறப்பு யாகங்களும், பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. இந்த விழாவை நேரில் காண, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்சேந்தூருக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதேபோல், பழனியிலும் சூரசம்ஹாரம் விழா இன்று விசேசமாக நடைபெறுகிறது. இதில், சூரபத்மன் உள்ளிட்ட 4 சூரர்களை வதம் செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது.

மேலும், காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், முருகப் பெருமான், ராஜவீதிகளில் பவனி வந்து அசுரனை வதம் செய்கிறார். இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் விழா நடைபெறுவதை முன்னிட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.