கொரோனா வைரஸ் பரவலால், தமிழகத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் நலத்திட்டங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

- தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் பழனிசாமியிடம் தொலைப்பேசியில் கேட்டறிந்தார் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு. அப்போது, கொரோனா தடுப்பு பணிகளைத் தமிழக அரசு சிறப்பாக மேற்கொள்வதாகக் கூறி, வெங்கையாநாயுடு பாராட்டு தெரிவித்தார்.

- தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள், செவிலியர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார்.

- சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த பெண்ணிடம்; அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும், உடல்நிலை குறித்தும் காணொலியில் முதலமைச்சர் பழனிசாமி கேட்டறிந்தார்

- சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை கை விட்டனர். மருத்துவமனை டீன் அழைத்துப் பேசிய நிலையில், இன்று மதியம் 3 மணி முதல், பணி புறக்கணிப்பில் ஈடுபட மருத்துவர்கள் முடிவு செய்திருந்த நிலையில், தற்போது அது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

- தமிழகத்தில் கொரோனா பாதித்த நபர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட உலக சுகாதார அமைப்பு குழுவினர், சேலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

- மே மாதத்திற்கான ரேசன் பொருட்களைப் பெற ஏப்ரல் 24, 25 ஆம் தேதிகளில், குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கனில் குறிப்பிட்ட எந்த நாளில் ரேஷன் கடையில் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற தகவல் இருக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

- கொரோனாவுக்கு எதிராக செயலி, இணையதளங்களை உருவாக்க ஐடி தொழில்நுட்ப மாணவர்கள், அத்துறை பேராசிரியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா அழைப்பு விடுத்துள்ளார். அதில், 25 வகை அரசுத் துறைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில், செயலியை உருவாக்க வேண்டும் என்றும், பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய செயலியை வடிவமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

- கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளதாகவும், அமெரிக்காவின் தடுப்பு மருந்து நிறுவனத்தோடு இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும், கண்டுபிடிப்பு அடுத்த கட்டத்திற்குச் செல்லும் பட்சத்தில், தடுப்பூசி மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என்று எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

- கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுகாதாரப் பணியாளர்களிடம், வீடுகளை காலி செய்யுமாறு வற்புறுத்தினால், வீட்டின் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

- மே 3 வரை ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என்று, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

- சென்னை மாநகராட்சி முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளான ஏப்ரல் 26, மே 3 ஆம் தேதிகளில், முழு அடைப்பு அவசியம் என்றும், மருத்துவமனை மற்றும் மருந்தகங்களைத் தவிர பிற கடைகள் மூடப்பட வேண்டும் என்றும் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

- 40 க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு முடியும் வரை 3 வேலை உணவு வழங்கப்படும் என்று, திருநின்றவூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

- வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குப் பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு, மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- தமிழகத்தில் தனியார் பள்ளிக்கு நிகராக ஆன்லைன் மூலம், பல அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருவது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

- தாழ்வழுத்த தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மின் இணைப்பின் மின் அளவீட்டைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பலாம் என்று மின்சார வாரியம் கூறியுள்ளது.