தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

கடலூர் மற்றும் நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பது தொடர்பாக, தமிழக அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.

இதனால், 45 கிராமங்களில் உள்ள சுமார் 56 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உருவானது.

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். மேலும், அந்த பகுதியில் உள்ள விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே, காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாகத் தமிழக அரசு சட்டசபையில் அறிவித்தது.

அதன்படி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், வேளாண் மண்டல மசோதா சட்டமானது.

இதனையடுத்து, கடலூர் மற்றும் நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கப் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து, காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை, தமிழக அரசு தற்போது அரசிதழில் வெளியீடு உள்ளது.

இதனிடையே, தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு, 45 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.