தமிழகத்தில் பச்சை பகுதி மாவட்டங்களில் தொழில் தொடங்கலாம் என்று முதலைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்தபடியே, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது மாவட்ட ஆட்சியர்களுடன் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “விவசாயப் பணிகளுக்கு பொது முடக்கத்தில் முழுவலிக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

மேலும், “பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதில்லை என்றும், காய்கறிகள் வாங்க சந்தைக்குச் செல்லும் மக்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

“கிராமப் புறங்களில் கொரோனா தொற்று பெரும் அளவில் குறைந்துள்ளது என்றும், ஆனால் சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரவில்லை” என்றும் முதலமைச்சர் கவலைத் தெரிவித்தார்.

“100 நாள் வேலைத் திட்டத்தில் பணி புரிபவர்கள் 50 வயதுக்கு மேல் இருந்தால், அவர்கள் வேலைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, அம்மா உணவகங்கள் மூலம் தரமான உணவு மக்களுக்குக் கிடைப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், “கிருமி நாசினி அனைத்து பகுதிகளிலும் தெளிக்க வேண்டும் என்றும், நகர் பகுதியில் இருக்கும் கழிப்பறைகளை 3 முறை தினமும் சுத்தம் செய்ய வேண்டும் என்றும், முதலமைச்சர் வலியுறுத்தினார்.

குறிப்பாக, நோய் பாதிப்பு உள்ள பகுதிகள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு உள்ளதாகவும், பச்சை பகுதி மாவட்டங்களில் தொழில் தொடங்கலாம் என்று முதலைச்சர் கூறியுள்ளார்.

“கொரோனா தொற்று இல்லாத கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றும் மாவட்ட ஆட்சியரை, முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், சிவப்பு மாவட்டங்களை ஆரஞ்சு மாவட்டமாகவும், ஆரஞ்சு மாவட்டங்களைப் பச்சை மாவட்டமாக மாற்ற வேண்டும் என்றும், அப்போது தான் முழுமையாகத் தொழில்கள் துவங்க முடியும் என்றும், இதற்குப் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

இறுதியாக, “கொரோனா வைரஸ் பாதிப்பை மன வலிமையோடு வெல்வோம்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.