தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு அரபிக் கடலில் வரும் 31 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால், கேரளா மற்றும் தென் இந்தியாவில் தென்மேற்கு பருவ மழையானது, வரும் ஒன்றாம் தேதி முதல் தொடங்குவதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மத்திய மேற்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஏமனை நோக்கி நகரும் என்பதால், மத்திய கிழக்கு மற்றும் வடமேற்கு தென் கிழக்கு அரபிக் கடலுக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இதனைத்தொடர்ந்து, தென் இந்தியாவில் தென்மேற்கு பருவமழையும் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கேரளாவில் வரும் ஜூன் 5 ஆம் தேதி தான் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் இதற்கு முந்தைய அறிவிப்பில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.