மனைவி அடித்ததால் மின் கோபுரத்தில் ஏறி, கணவன் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை அடுத்த ஓக்கூரைச் சேர்ந்த ஜீவா, மது போதையில் தன் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். ஜீவாவின் தொல்லை தாங்க முடியாமல், பக்கத்து வீட்டுக்காரர்கள் ஜீவாவுடன் சண்டைக்கு சென்றுள்ளனர்.

அப்போது, ஜீவாவின் மனைவி கணவரைத் திட்டி சண்டையை விலக்க முயன்றுள்ளார். ஆனால், இதைப் புரிந்துகொள்ளாமல், ஜீவா மறுபடியும் மனைவியிடம் சண்டைக்கு சென்றுள்ளார். இதனால், கணவனைத் திட்டிய அவருடைய மனைவி, கோபத்தில் கணவனை ஒரு அடி அடித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், கோபித்துக்கொண்டு அங்கிருந்து சென்ற ஜீவா, அப்பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து கேள்விப்பட்ட அவரது மனைவி, மற்றும் அவரது மகள் ஓடிவந்து கீழே நின்று சமாதானம் பேச முயன்றனர். ஆனால், அதை எதையுமே அவர் காதுகொடுத்த வாங்கவில்லை.

பின்னர், இது குறித்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மதகுபட்டி போலீசார், கீழே இறங்கி வரும்படி பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, தன்னிடம் சண்டைக்கு வந்த அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும் என்று ஜீவா அடம் பிடித்து, மின் கம்பியைத் தொடுவதும், கீழே குதிப்பதுமாக பாவலா காட்டிக்கொண்டு இருந்தார்.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் உள்ள நாட்டரசன் கோட்டை, காளையார் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

இதனையடுத்து, 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் மேலே ஏறி, அவரை லாபகரமாகப் பிடித்து கீ்ழே இறக்கினர். கீழே இறங்கி வந்த அவர், வட்டாட்சியர் மைலாவதி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

பின்னர், அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஜீவா எங்கிருந்து மது வாங்கினார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கொரோனா வைரசால் ஊரே முடங்கிக் கிடக்கும் வேளையில், மனைவியுடன் சண்டைபோட்டுக்கொண்டு, கணவன் உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.